டாஸ்மாக்கை திறக்கும் மாநில அரசை கண்டித்து கருப்பு அட்டையுடன் ஆர்ப்பாட்டம்: கூட்டணி கட்சி தலைவர்கள் அறிவிப்பு

சென்னை: நிதி வழங்காத மத்திய அரசு, டாஸ்மாக்கை திறக்கும் மாநில அரசை கண்டித்து அனைத்து கட்சிகள் சார்பில் கருப்பு அட்டையுடன் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி :  டாஸ்மாக் கடைகளை மே 7ம் தேதி முதல் திறப்பதென தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இது சமூக பரவலை சீர்குலைத்து கொரோனா நோயை பரப்புகிற முயற்சி. எனவே,  மே 7ம் தேதி ஒருநாள் மட்டும் கருப்பு சின்னம் அணிந்து அன்று காலை 10 மணிக்கு அவரவர் இல்லத்தின் முன் 5 பேருக்கு அதிகமாகாமல் 15 நிமிடங்கள் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறப்பதையும், கொரோனா நோய் ஒழிப்பில் தோல்வியடைந்த அதிமுக அரசையும், மாநில அரசு கோரிய நிதியை வழங்காத மத்திய அரசையும் கண்டித்து முழக்கமிட்டு கலைவதென முடிவெடுக்கப்பட்டுள்ளது.  

இந்த கண்டனப் போராட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று எதிர்ப்பை தெரிவிக்க கேட்டுக் கொள்கிறேன். மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்:  மத்திய - மாநில அரசுகளை கண்டித்து திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் சார்பில் இன்று அவரவர்கள் வீட்டிலேயும், கட்சி அலுவலகங்களிலும் 5 பேருக்கு மிகாமல் கருப்பு அட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான கூட்டறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் கட்சி அலுவலகங்களுக்கு முன்பாகவும் 5 பேருக்கு  மிகாமல் கருப்பு பட்டை அணிந்து காலை 10 மணிக்கு 15 நிமிடங்கள் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும். நாளை ஒருநாள் முழுவதும் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிய வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்: கொரோனா காலத்தில் குறைந்தபட்ச பேரிடர் நிவாரண நிதியும் கொடுக்காமல் தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. பசியும் பட்டினியுமாக வாழ்ந்து வரும் ஏழை எளிய மக்களுக்கு நிதியுதவி செய்து ஆதரிக்காமல், அறிவுரை கூறி வரும் பாஜக மத்திய அரசையும், அதிமுக மாநில அரசையும், கண்டித்தும், எதிர்த்தும், நேரடியாக களம் இறங்கி போராடுவது தவிர வேறு வழி ஏதும் இல்லை என்ற நிலையில் இன்று காலை சரியாக 10 மணிக்கு தொடங்கி 10.15 வரையிலும் 15 நிமிடங்கள் அவரவர் வீடுகளில், சமூக இடைவெளி கடைப்பித்து, கருப்பு சட்டை அணிந்து, கொடி பிடித்து அதிமுக அரசுக்கு எதிரான கண்டன முழக்கங்கள் எழுப்பும் போராட்டத்தை திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன.

Related Stories: