சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் நாளை திறக்கப்படாது: தமிழக அரசு தகவல்

* டெல்லி போல கொரோனா வரி விதிப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை

சென்னை: சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் நாளை திறக்கப்படாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், டெல்லி போல கொரோனா வரி விதிப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி மாலை 6 மணி முதல்  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில்,  மாநிலம் முழுவதும் செயல்பட்டு வந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.  இதனால், அரசுக்கு தினமும் ரூ.80 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது. எனினும் கொரோனா பாதிப்பை தவிர்க்கவே தமிழக அரசு இந்த நடவடிக்கை எடுத்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆந்திரா, கர்நாடகா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில்  மதுக்கடைகள் திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஆந்திரா, கார்நாடகா எல்லைப்பகுதிகளில் உள்ள குடிமகன்கள் மதுவாங்க அதிகாலையிலேயே சென்றனர். இதனால், கர்நாடகா, ஆந்திரா எல்லை பகுதிகளில் உள்ள மதுக்கடைகளில் கூட்டம் அலை

மோதியது.  இந்த நிலையில் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் உள்ள மதுக்கடைகளுக்கு தமிழக எல்லை பகுதியில் உள்ள மக்கள் அதிக அளவில் செல்வதால் மாநிலங்களுக்கு இடையேயான மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதில் பெரும் சிரமம் ஏற்படுவதாக கூறி  தமிழக அரசு நாளை முதல் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுபான கடைகள் திறக்கப்படும் என்று அறிவித்தது.   

இந்நிலையில் தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் நாளை திறக்கப்படாது. இந்த கடைகள் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதனால் சென்னையின் நுழைவாயிலான பெருங்களத்தூர், அக்கரை சோதனைச்சாவடி, செம்மஞ்சேரி, நசரத்பேட்டை, செங்குன்றம், மணலிபுதுநகர் வரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது. இதற்கிடையில் டெல்லி மாநில அரசு மதுபானங்கள் மீது 70 சதவீதம் கொரோனா வரி விதித்துள்ளது. இதனால் பெரும்பாலானவர்கள் மது வாங்கவில்லை. அதேநேரத்தில், வருமானமும் அரசுக்கு குறையவில்லை. இதனால், தமிழகத்திலும் அதேபோல, கொரோனா வரி விதிப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Related Stories: