முதல்முறையாக பக்தர்களின்றி திருமங்கலம் மீனாட்சியம்மன் கோயிலில் திருக்கல்யாணம்

திருமங்கலம்: திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் முதல்முறையாக பக்தர்கள் இன்றி திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது திருமங்கலத்தில் புகழ்பெற்ற மீனாட்சி சொக்கநாதர் கோயில் அமைந்துள்ளது. மதுரை மீனாட்சியம்மனுக்கு திருமாங்கல்யம் தயார் செய்து திருக்கல்யாணத்திற்கு அனுப்பிய பெருமை கொண்டதால் இந்த ஊருக்கு திருமாங்கல்யம் என்ற பெயர் வந்தது. பின்னர் இப்பெயர் மருவி நாளடைவில் திருமங்கலமாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது. ஆண்டுதோறும் இக்கோயிலில் சித்திரை மாதத்தில் மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம். தற்போது கொரோனா தடுப்பு ஊரடங்கு அமலில் உள்ளதால் இந்த ஆண்டு திருக்கல்யாணம் நேற்று கோயிலில் எளியமுறையில் நடைபெற்றது. சங்கரநாராயணபட்டர் தலைமையில் ஐந்து சிவாச்சாரியர்கள் மட்டுமே கலந்து கொண்ட இத்திருக்கல்யாணத்தில் மீனாட்சியம்மன் பச்சை பட்டுத்தியும், சொக்கநாதர் வெண்மைபட்டு உடுத்தியும் மணக்கோலத்தில் காட்சியளித்தனர்.

பின்னர் மேளதாளங்கள் முழங்க மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது. ஊரடங்கு காரணமாக பக்தர்கள் யாரும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. திருமங்கலம் பகுதி திருமணமான பெண்கள் வீட்டிலிருந்தபடியே புதுமஞ்சள் கயிற்றை மாற்றி கொண்டனர். மிகவும் பழமையான இக்கோயில் வரலாற்றில் நேற்று தான் முதல்முறையாக பக்தர்கள் யாருமின்றி திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. ஏற்பாடுகளை கோயில் ஆணையாளர் சர்க்கரையம்மாள் தலைமையில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டையில் உள்ள பழமையான மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் பக்தர்களின்றி திருக்கல்யாணம் நடைபெற்றது. கோயில் முகப்பில் ஆங்காங்கே நின்று பக்தர்கள் சாமி கும்பிட்டு சென்றனர். சில பெண்கள் கோயில் வாசலில் மாங்கல்யத்தை மாற்றி சென்றனர்.

Related Stories: