நிவாரணம் பேரில் அவமதிப்பதா? கியூவில் நின்று அரிசி வாங்க தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு

கியூவில் நின்று அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வாங்க தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  நலிந்த தயாரிப்பாளர்கள் பலர் இந்த ஊரடங்கு சமயத்தில் அவதிப்படுவதாகவும் அவர்களுக்கு உதவ வேண்டும் என்றும் தயாரிப்பாளர் கே.ராஜன், நடிகர் ரஜினி காந்துக்கு கோரிக்கை வைத்தார். இதையடுத்து 750 பேருக்கு அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்குவதாக ரஜினி தெரிவித்தார். சென்னையில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் இந்த பொருட்கள் வழங்கப்படும்.  தயாரிப்பாளர்கள் வரிசையில் வந்து இதை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதை கேள்விப்பட்டு தயாரிப்பாளர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். ‘ஹீரோக்களுக்கு கோடிகளில் சம்பளம் கொடுத்தவர்களே தயாரிப்பாளர்கள்தான்.

ஒரே படத்தின் நஷ்டத்தால் இன்று அவர்கள்  நலிந்த நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அவர்களால் உயர்ந்த நடிகர்கள் அவர்களை மதிக்காவிட்டாலும் மரியாதைக்குறைவாக நடத்தாமல் இருந்தாலே போதும். ஆனால், வரிசையில் நின்று உதவி பெறும்படி செய்வது அவர்களை அவமதிக்கும் செயல்’ என்கின்றனர். இது பற்றி தயாரிப்பாளர் சுரேஷ் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில், ‘எல்லோருக்கும் சம்பளம் கொடுத்த திரையுலக முதலாளிகள், தயாரிப்பாளர்கள். இன்று ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அரிசி பையை வாங்க கொளுத்தும் வெயிலில் கியூவில் நிற்கணுமா? இதை வாங்கிக்கோண்டு வந்தால் எவ்வளவு கவுரவக்குறைச்சல். இதை சிலர் போட்டோ வேறு எடுத்து போடுவார்கள். சின்ன பட்ஜெட்டில் ஒரு படம் எடுக்க கூட 1 கோடி செலவிடுகிறோம்.

அவர்கள் ஆயிரம் ரூபாய் அரிசிக்கு வெளியில் நிற்கணுமா? முடி வெட்டும் தொழிலாளர்களுக்கு அவர்கள் சங்கத்தினர் வழங்கிய அரிசியை கியூவில் நின்று அவர்கள் வாங்கி வந்துள்ளனர். அவர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் வேறுபாடு என்ன இருக்கும்? தயாரிப்பாளர்களுக்கு ரஜினி உதவ விரும்பினால், லாரன்ஸ் போல் ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்கலாம்’ என்றார். தயாரிப்பாளர் நந்தகோபால் கூறும்போது, ‘இதுபோல் கியூவில் நின்று உதவி பெறுவதை தயாரிப்பாளர்கள் தவிர்க்க வேண்டும். அவர்களை திரையுலகினர் அவமதிக்க கூடாது’ என்றார்.

Related Stories: