கொரோனா குறித்து ஆலோசனை: இன்று நடைபெறவுள்ள அணி சேரா நாடுகளின் மாநாட்டில் முதல் முறையாக பங்கேற்கிறார் பிரதமர் மோடி

டெல்லி: இன்று நடைபெறவுள்ள அணி சேரா நாடுகளின் மாநாட்டில் முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் பங்கேற்கிறார். அணி சேரா இயக்கம் எந்தவொரு அதிகார மையத்தின் சார்பாகவோ எதிராகவோ அணிசேராத நாடுகளின் குழுமமாகும். 2011ஆம் ஆண்டு நிலவரப்படி, இதில் 120 நாடுகள் உறுப்பினர்களாகவும் 17 நாடுகள் பார்வையாளர்களாகவும் உள்ளனர்.

இந்த இயக்கம் 1961-ம் ஆண்டு பெல்கிரேட்டில் உருவானது. யுகோசுலாவியாவின் அதிபராக இருந்த சோசப்பு பிரோசு டிட்டோ, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, எகிப்தின் இரண்டாவது தலைவர் ஜமால் அப்துல் நாசிர், கானாவின் முதல் தலைவர் குவாமே நிக்ரூமா மற்றும் இந்தோனேசியாவின் முதல் தலைவர் சுகர்ணோ இவர்களின் கருத்தாக்கத்தில் இந்த இயக்கம் துவங்கியது. இந்த ஐவருமே பனிப்போரில் ஈடுபட்டிருந்த மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய அதிகார மையங்களுக்கு இடையே நடுநிலையில் வளரும் நாடுகள் செல்லவேண்டும் என்ற கருத்துடையவர்களாக இருந்தனர்.

இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவிகேற்றப்பின், 2016-ம் வெனின்சுலாவில் நடந்த அணிசேரா நாடுகளின் பட்டியலில் கலந்து கொள்ளாமல் முதல்முறையாக தவிர்த்தார். தொடர்ந்து, 18-வது அணி சேரா நாடுகளின் மாநாடு கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்றது. இதிலும் பிரதமர் மோடி பங்கேற்கவில்லை. இந்த மாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகள் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு எதிராக உள்ளதே மோடி இந்த மாநாட்டை தவிர்ப்பதற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

இந்நிலையில், அணி சேரா நாடுகளின் மாநாடு அஜர்பைசான் அதிபர் இல்ஹாம் அலிவேவ் தலைமை இன்று நடக்கிறது. வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெறும் இந்த மாநாட்டில் முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் உலக நாடுகள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளதால், இந்த முறை மாநாட்டில் பங்கேற்கிறார் என்று கூறப்படுகிறது.

Related Stories: