திடீர் வியாபாரிகளிடம் காய்கறிகள் வாங்கிய 11 பேருக்கு கொரோனா: அசோக் நகர் 11வது தெருவுக்கு சீல்

சென்னை: சென்னை அசோக் நகர் புதூரை சேர்ந்த 2 பேர்  நிறுவனங்கள் மற்றும் வீடுகளுக்கு பால்சீலிங் செய்யும் வேலையை செய்து வந்தனர். ஊரடங்கு உத்தரவால் அவர்களுக்கு வேலை இல்லாமல் வறுமையில் இருந்துள்ளனர். இதனால் இருவரும் திடீரென காய்கறி வியாபாரிகளாக மாறி கோயம்பேடு மார்க்கெட் சென்று காய்கறிகளை வாங்கி சில்லறையில் விற்பனை செய்து வந்துள்ளனர். இவர்களிடம் காய்கறி வாங்கிய ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதியானது. உடனே திடீர் வியாபாரத்தில் ஈடுபட்ட 2 பேருக்கும் பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கும் கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. அதைதொடர்ந்து இவர்களிடம் காய்கறிவாங்கிய நபர்களுக்கும் பரிசோதனை செய்தனர். அதில் அசோக் நகர் 11வது தெருவில் உள்ள 11 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து 11 பேரையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும், 11 பேரின் குடும்ப உறுப்பினர்களையும் அதிகாரிகள் தனிமைப்படுத்தியுள்ளனர். தொற்று மேலும் பரவாமல் இருக்க அவர்கள் வசித்து வந்த அசோக் நகர் 11வது தெரு முழுவதும் மாநகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்து மக்கள் யாரும் வெளியே செல்லாதபடி மூடி சீல் வைத்தனர். 33 பேருக்கு கொரோனா:

சென்னை திருவிக நகர் மண்டலத்தில் நேற்று முன்தினம் வரை 290 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று மேலும் 33 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவிக நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மரியம் நாயக்கர் 2வது தெருவை சேர்ந்த 46 வயது நபருக்கும், அண்ணல் காந்தி தெருவை சேர்ந்த 56 வயது நபருக்கும், புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த 9 பேருக்கும் பேசின்பிரிட்ஜ் பகுதியை சேர்ந்த 6 பேருக்கும் என திருவிக நகர் 6வது மண்டலத்தில் நேற்று மட்டும் 33 பேருக்கு கொரோனா தொற்று  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

Related Stories: