ஊழியருக்கு கொரோனா தொற்று சக ஊழியர்கள் வேலைக்கு வர மறுப்பு ஆவின் நிறுவன உற்பத்தி பாதிப்பு

சென்னை: மாதவரத்தில் உள்ள ஆவின் நிறுவன ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், சக ஊழியர்கள் வேலைக்கு வர மறுத்தனர்.  இதனால், அங்கு உற்பத்தி பாதிக்கப்பட்டது.  மாதவரம் பால் பண்ணை பகுதியில் உள்ள ஆவின் நிறுவனத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் 3 ஷிப்ட்களில் பணிபுரிந்து வருகின்றனர்.  இங்கு, உற்பத்தி செய்யப்படும் பால் பாக்கெட்டுகள் சுமார் 40 லாரிகள் மூலம் தினசரி சென்னையில் உள்ள பல்வேறு விநியோகஸ்தர்களுக்கும்,  பொதுமக்களுக்கும் அனுப்பப்படுகிறது.

இந்நிலையில், பால் பண்ணை பகுதியில் வசிக்கும் ஆவின் நிறுவன ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்,  ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து, ஆவின் நிறுவனத்தில் பாதுகாப்பு பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டனர்.  

இதுபற்றி அறிந்த சக ஊழியர்கள், தங்களுக்கும் நோய் தொற்று ஏற்படுமோ என்ற அச்சத்தில் நேற்று வேலைக்கு வரவில்லை. இதனால், உற்பத்தி  பாதிக்கப்பட்டது. இதையடுத்து, லாரி ஓட்டுனர்கள், கிளீனர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் பால் பாக்கெட் உற்பத்தி மற்றும் ஏற்றுதல், இறக்குதல்  பணியில் ஈடுபட்டனர்.

இதனால், காலை 3 மணிக்கு லாரியில் ஏற்ற வேண்டிய பால் பாக்கெட்டுகள் 2 மணி நேரம் தாமதமாக விநியோகம் செய்யப்பட்டது. அதிகாலையில்  பால் பாக்கெட் பெற வினியோகஸ்தர்களும், பொதுமக்களும் வெகுநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஊழியர்கள் திடீரென வேலைக்கு  வராததால் நேற்று 65 சதவீதம் மட்டுமே பால் உற்பத்தி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வாக, உற்பத்தி பிரிவு முழுமையாக  செயல்படுவதற்கு அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: