தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீடு கட்டாயம்; ஊரடங்கு காலத்தில் இயங்கும் தொழிற்சாலைகளுக்கு வழிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: ஊரடங்கு காலத்தில் என்னென்ன பணிகளுக்கு அனுமதி, எவற்றுக்கு தடை என்பது பற்றி தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா பரவல் தடுப்பு வட்டாரங்களில் கட்டுப்பாடுகளில் எந்தவகையான தளர்வும் கிடையாது எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தை பொறுத்த வரையில் ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது மே மாதம் 17-ம் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கில் பின்பற்றப்படும் நடைமுறைகள் குறித்து நேற்று தமிழக அரசு அறிக்கை வெளியிட்டது.

அதில் குறிப்பாக கொரோனா தடுப்பு கட்டுப்பாட்டு பகுதிக்குள் எந்த தளர்வும் இல்லை என தெரிவிக்கப்பட்டது. அதேபோல் மற்ற இடங்களில் கடைகள், தொழிற் நிறுவனங்கள் இயங்குவதற்கான நிபந்தனைகள் அதில் இடம் பெற்றிருந்தது. ஆனால் இந்த பட்டியலில் நகை கடைகள் மற்றும் துணிக்கடைகள் இடம்பெறவில்லை. இதனால் இந்த கடைகளை திறப்பதா, வேண்டாமா என்ற குழப்பத்தில் உரிமையாளர்கள் இருந்தனர். இதுதொடர்பாக உரிமையாளர்கள் சார்பில் தமிழக அரசிடம் முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பான முழுவிவரம் அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது;

* தொழிற்சாலைகள் நாள்தோறும் 2 முறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

* கழிப்பறைகளை ஒவ்வொரு மணி நேரத்துக்கும் சுத்தம் செய்ய வேண்டும்.

*  200 தொழிலாளர்களுக்கு மேல் பணிபுரியும் தொழிற்சாலையில் மருத்துவர் இருக்க வேண்டும்.

* தொழிலாளர்கள் வரும் போதும், வெளியே செல்லும் போதும் தெர்மல் ஸ்கேன் செய்ய வேண்டும்.

* தேவையற்ற பார்வையாளர்களை உள்ளே அனுமதிக்க கூடாது.

* 55 வயதிற்கு கீழ் உள்ளவர்கள், மருத்துவ ரீதியாக தகுதி உள்ளவர்களை மட்டுமே வேலைக்கு அழைக்க வேண்டும்

* அனைத்து தொழிலார்களுக்கும் மருத்துவ காப்பீடு இருக்க வேண்டும்.

*  ஏ.சி. வசதி உள்ள நகைக்கடைகள், துணிக்கடைகள் உள்ளிட்டவைகளுக்கு அனுமதி கிடையாது.

* பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், பயிற்சி நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை.

* உள்ளூர் மருத்துவர் ஒருவர் தொழில்நிறுவனங்களை ஆய்வு செய்ய வேண்டும்.

Related Stories: