கொரோனா பாதிப்பை மறுக்கமாட்டேன்; தமது இறப்பை அறிவிக்க டாக்டர்கள் திட்டமிட்டனர்...பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன் உருக்கம்

லண்டன்: தமது இறப்பை அறிவிக்க டாக்டர்கள் திட்டத்தை தயார் செய்து வைத்திருந்தனர் என பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். இந்தியா உள்ளிட்ட 210 நாடுகளுக்கும் மேலாக பரவிய கொரோனா வைரஸ் கடும்  தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இங்கிலாந்திலும், கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில், அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சனும் (55) வைரசால் பாதிக்கப்பட்டார். முதலில் அவர் வீட்டில் தனிமையில் இருந்தார். ஆனால்,  திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்ததால், லண்டனில் உள்ள செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு மூன்று நாட்கள் அவர் ஐசியூ.வில் இருந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் உடல்நலம்  தேறியுள்ளார்.

இதையடுத்து, அவர் மருத்துவமனையில் இருந்து கடந்த ஏப்ரல் 12-ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தன்னுடைய உயிரை காப்பாற்றிய தேசிய சுகாதாரத்துறையினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறினார். மருத்துவர்கள்  அறிவுறுத்தலின்படி, உடனடியாக போரிஸ் ஜான்சன் தன்னுடைய பொறுப்புகளை கவனிக்க மாட்டார் என்றும், தொடர்ந்து சில நாட்கள் ஓய்வில் இருப்பார் என்றும் பிரதமர் இல்லம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நாட்கள் குறித்து ‛தி சன் ஊடகத்திற்கு இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் பேட்டியளித்துள்ளார். அதில், நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டது கடினமான தருணம். நான்  அதை எப்போதும் மறுக்கமாட்டேன். அப்போது நான் அவ்வளவு சுயநினைவுடன் இல்லை என்றார். ஆனால், என்னைக் காப்பாற்ற தற்செயலான திட்டங்கள் மட்டுமே டாக்டர்களிடம் இருந்தது. அவர்கள் எனக்கு ஒரு முகமூடியைப் பொருத்தி,  அதன் மூலம் பல லிட்டர், லிட்டராக ஆக்சிஜன் ஏற்றினர். என் மூக்கு செயல்படும் தன்மையை இழந்தது. அந்த நேரத்தில் நான் இறந்துவிட்டால் அதை எவ்வாறு அறிவிக்க வேண்டும் என்ற திட்டத்தையும் டாக்டர்கள் தயார் செய்து  வைத்திருந்தனர்.

இந்த நிலையிலிருந்து எப்படி வெளியேறப்போகிறேன் என என்னை நானே கேட்டுக்கொண்டேன். ஒரு சில நாளில் என் உடல்நிலை இன்னும் மோசமடைந்ததால், இனி பிழைக்கப்போவதில்லை என நினைத்தேன். எதனால் உடல் இவ்வளவு  மோசமானது என்பதை என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை. டாக்டர்களும் நர்சுகளும் மிகவும் கடுமையாகப் போராடி என் உயிரை மீட்டுக்கொண்டுவந்தனர். அவர்களின் அற்புதமான செயலால்தான் நான் மீண்டுவந்தேன். எனவே,  அவர்களுக்கு எப்போதும் நன்றியுணர்வுடன் இருப்பேன் என்றார்.

மருத்துவர்களை கவுரவித்த போரிஸ் ஜான்சன்

இதற்கிடையே, இங்கிலாந்து கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களை கவுரவிக்கும் விதமாக அவர்களது பெயரை பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது குழந்தைக்கு வைத்துள்ளார். இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்  ஏற்கனவே இரண்டு மனைவிகளை விவாகரத்து செய்த நிலையில், கேரி சைமண்ட்ஸ் என்ற பெண்ணுடன் காதல் வயப்பட்டார். திருமணம் செய்து கொள்ளாமல் இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில், சைமண்ட்ஸுக்கு அண்மையில்  ஆண் குழந்தை பிறந்தது.

இதைத்தொடர்ந்து போரிஸ் ஜான்சன் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வர சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நிக்கோலஸ் என்ற பெயரை சேர்த்து வில்பிரட் லேவெரி நிக்கோலஸ் ஜான்சன் என தனது  குழந்தைக்கு பெயர் சூட்டியுள்ளனர்.

Related Stories: