விபத்தில் சிக்கிய இளைஞருக்கு கொரோனா அடையாறு போக்குவரத்து காவல் நிலையத்திற்கு சீல்: மீட்பு பணியில் ஈடுபட்ட 4 காவலர்களுக்கு சோதனை

வேளச்சேரி: கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஈஞ்சம்பாக்கம் பகுதியை சேர்ந்த 26 வயது இளைஞர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர், கடந்த மாதம் 28ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்னை சென்றபோது, ஆழ்வார்பேட்டை பகுதியில் விபத்தில் சிக்கினார். இதில், அவரது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. தகவலறிந்து, அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையத்தில் இருந்து, 4 காவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, அந்த இளைஞரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவு நேற்று வெளியானது. அதில், அந்த வாலிபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, விபத்தில் சிக்கிய இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த 4 காவலர்களுக்கும் கொட்டிவாக்கத்தில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும், இவர்கள் 4 பேர் மூலம் சக காவலர்களுக்கு நோய் தொற்று பரவி இருக்கலாம் என்பதால், நேற்று அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையத்தில் மாநகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தினர். தொடர்ந்து, காவல் நிலையத்தை மூடி சீல் வைத்தனர்.

தீயணைப்பு அலுவலருக்கு கொரோனா

எண்ணூர் தீயணைப்பு  நிலைய அலுவலர் சமீபத்தில் தூத்துக்குடிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இவர், நேற்று முன்தினம் ரத்த பரிசோதனை செய்து விட்டு தூத்துக்குடி சென்றார். அங்கு பணியில் சேர்வதற்கு முன்பே, அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மதுரையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து எண்ணூர் தீயணைப்பு நிலையத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அங்கு பணிபுரிந்த மற்ற ஊழியர்களை பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல், மாத்தூரை சேர்ந்த கூலி தொழிலாளி மற்றும் மாதவரம் பால்பண்ணை பகுதியை சேர்ந்த ஆவின் நிறுவன ஊழியர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: