ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற காய்கறி கடைக்காரருக்கு கொரோனா: சிஎம்டிஏ அதிகாரிகள் அதிர்ச்சி

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் அங்கு வேலை பார்க்கும் வியாபாரிகள், தொழிலாளர்கள் என 300க்கும் மேற்பட்டோருக்கு   கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில், கோயம்பேட்டில் காய்கறி சந்தை இயங்குவது குறித்து சிஎம்டிஏ சார்பில் நேற்று முன்தினம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற காய்கறி கடை உரிமையாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அந்த கூட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.  

இதனிடையே, கோயம்பேடு சந்தையில் இருந்து அரியலூர் சென்ற 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கோயம்பேடு பூக்கடையில் இருந்து வாங்கி வந்து வடபழனி கோயில் வாசலில் பூ விற்ற 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், ஒட்டேரி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் கோயம்பேடு பகுதியை சேர்ந்த 43 வயது காவலர் கடந்த 30 தேதி, ஒட்டேரியில் கொரோனா தொற்று ரத்த பரிசோதனை மையத்தில் சோதனை செய்தார்.

நேற்று அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. உடனே காவலர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகிறார்.

இவர், தனது மாமனார் வீட்டில் 15 பேருடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து காவலர் மனைவி உட்பட 15 பேருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. புழல்: செங்குன்றம் நாரவாரிகுப்பம் சுப்பிரமணிய பாரதியார் தெருவை சேர்ந்த 43 வயது நபருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவர், ராயபுரம் மண்டலத்தில் சாலை பணியாளராக பணியாற்றி வருகிறார். இதேபோல், புழல் அடுத்த புத்தாகரம் குறிஞ்சி நகர் காந்தி பிரதான சாலையை சேர்ந்த 24 வயது பெண்ணுக்கு கொரோனா உறுதியானது. இவர் கோயம்பேடுக்கு அடிக்கடி சென்று வந்தவர். இவர்களை சென்னை அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதித்து, சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Related Stories: