மே மாதம் வழக்குகளை விசாரிக்கும் 2 அமர்வு, 10 தனி நீதிபதிகள் பட்டியல்: உயர் நீதிமன்றம் வெளியிட்டது

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் மே மாதம் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் பட்டியலை உயர் நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக உயர் நீதிமன்றம் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களின் பணிகளும் முடங்கின. நீதிமன்றங்களில் அவசர முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் மட்டும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரிக்கப்பட்டுவந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு மே மாத கோடை விடுமுறையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் அறிவித்தது. இதையடுத்து, மே மாதத்தில் முதல் 15 நாட்கள் விசாரணை செய்யும் நீதிபதிகள் பட்டியலையும், அடுத்த 15 நாட்களுக்கான நீதிபதிகள் பட்டியலையும் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அதன்படி, மே 1ம் தேதி முதல் 15ம் தேதிவரை நீதிபதிகள் வினீத் கோத்தாரி, புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் அடங்கிய அமர்வும், நீதிபதிகள் கிருபாகரன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வும் ரிட் மற்றும் பொதுநல வழக்குகளை விசாரிக்கின்றன. மேலும், நீதிபதிகள் எம்.துரைசாமி, எஸ்.வைத்தியநாதன், ஆர்.சுரேஷ்குமார், எஸ்.எம்.சுப்பிரமணியம் உள்ளிட்ட 10 தனி நீதிபதிகளும் வழக்குகளை விசாரிப்பார்கள். நீதிபதி இளந்திரையன் ஜாமீன் மனுக்களையும் நீதிபதி டி.ரவீந்திரன் முன்ஜாமீன் மனுக்களையும் விசாரிப்பார்கள்.

மே 16 முதல் மே 31 வரையிலான காலத்தில் நீதிபதிகள் சத்தியநாராயணன், அனிதா சுமந்த் அமர்வும், எம்.எம்.சுந்தரேஷ், பி.டி.ஆஷா அமர்வும் ரிட் மற்றும் பொதுநல வழக்குகளை விசாரிப்பார்கள். மேலும், நீதிபதிகள் டி.ராஜா, ரவிச்சந்திரபாபு, மகாதேவன் உள்ளிட்ட 10 தனி நீதிபதிகளும் வழக்குகளை விசாரிப்பார்கள். நீதிபதி வேலுமணி முன்ஜாமீன் மனுக்களையும், நீதிபதி நிர்மல்குமார் ஜாமீன் மனுக்களையும் விசாரிப்பார்கள்.

Related Stories: