கொரோனா தடுப்பு பணியில் 50 வயதுக்குட்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடலாம்: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

சென்னை:  அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார் அனுப்பியுள்ள கடிதம்: அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பலர், ஊரடங்கு  நாட்களில் தாங்களாவே முன்வந்து பொதுமக்களுக்கு வேண்டிய மருத்துவம் சாராத சேவைகளை செய்து வருகின்றனர். இது குறித்து கடவ்த 24ம் தேதி பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் பள்ளிக் கல்வித்துறைக்கு தெரிவித்தன. இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் அதிகாரிகளுடன், அரசுப் பள்ளி ஆசிரியர்களும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். அதற்கான வழிகாட்டுதல்களையும் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஆசிரியர்களின் வேண்டுகோளின் பேரில், பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும், அரசுப் பள்ளி ஆசிரியர்களில் 50 வயதுக்கு கீழ் உள்ள ஆசிரியர்களை கொரோனா தடுப்பு பணியில் பயன்படுத்திக் கொள்ளலாம். விருப்பம் உள்ள ஆசிரியர்கள், கணக்கெடுப்பு பணி, உணவுப் பொருள் வினியோகம், பொது இடங்களில் மக்கள் கடைபிடிக்க வேண்டிய சமூக இடைவெளியை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடலாம்.  எனவே, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், விருப்பம் உள்ள 50 வயதுக்குட்பட்ட ஆசிரியர்களின் பட்டியல்களை தயாரித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் வழங்கி, மருத்துவம் சாராத பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட  செய்ய வேண்டும். இவ்வாறு முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Related Stories: