சொந்த ஊருக்கு அனுப்பி வைங்க!... அனுமதி அளிக்கக் கோரி வடமாநில தொழிலாளர்கள் சென்னையில் போராட்டம்

சென்னை: சென்னையில் தங்களை சொந்த ஊருக்கு திரும்ப அனுமதி அளிக்கக் கோரி வடமாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மாநகரின் கிண்டி, வேளச்சேரி, முகப்பேர் உள்ளிட்ட பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள வடமாநில தொழிலாளர்கள், ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டதால் தங்களை சொந்த ஊருக்கு திரும்ப அனுமதி அளிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊரடங்கை  தமிழகத்தில் படிப்படியாக தளர்த்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர்.

இதற்கிடையே, மத்திய அரசால் விதிக்கப்பட்ட 2ம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், மேலும் 14 நாட்களுக்கு ஊரடங்கு  நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது. கொரோனா பாதிப்பு குறையாமல் அதிகரித்து வரும் சூழலில் ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை, வேளச்சேரி, கிண்டி, முகப்பேர், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் வடமாநில  தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 92 ஆயிரம் வடமாநில தொழிலாளர்கள் தங்கி கூலி வேலை பார்த்து வரும் நிலையில், ஊரடங்கால் வேலையிழந்துள்ள அவர்கள் பாதிக்கப்படாத வகையில், தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இருப்பினும் ஒரு மாதத்தை கடந்தும் ஊரடங்கு நீடிப்பதால் சொந்த ஊர்களுக்கு செல்ல அனுமதிக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் காவல்துறையினர், பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

Related Stories: