தெற்கு அந்தமான் மற்றும் தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது : வானிலை ஆய்வு மையம்

சென்னை : தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, திருப்பூர், நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், மதுரை, தென்காசி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, குமரி, நெல்லை ஆகிய  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்காலில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது மட்டுமல்லாமல் தெற்கு அந்தமான் மற்றும் தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது என்றும் இது அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆக மாறும் என்றும் இது தமிழகத்தை நோக்கி வருமா என்பது நாளை மறுநாள் தெரிய வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வரையிலும் அவ்வப்போது 65 கிமீ வரையிலும் வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும்  அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேனி மாவட்டம் மஞ்சலார் பகுதியில் 7 செ.மீ. மழையும் பெரியகுளத்தில் 4 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. 

Related Stories: