கொரோனா பரவல் எதிரொலி; திருவாரூர்,அரியலூர் , கடலூர் மாவட்டங்களில் நாளை முழு ஊரடங்கு அமல்...மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு

சென்னை: கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் மார்ச் 24ம் தேதி முதல் மே 18-ம் தேதி வரை ஊடரங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இந்த ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஊடரங்கு அமலில் இருந்தாலும் பொதுமக்களில் சிலர் பைக், ஸ்கூட்டர் மற்றும்  கார்களில் வெளியே சுற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அபராதம் மற்றும் நூதன தண்டனை விதித்தாலும், நாளுக்கு நாள்  பொதுமக்கள் வெளியே வருவது அதிகரித்துக் கொண்டே செல்கிறதே தவிர குறையவில்லை.

குறிப்பாக சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரப்பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கிறது. இதுபோன்ற நகர் பகுதிகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க சென்னை, கோவை, மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கடந்த 26ம் தேதி காலை 6 மணியில் இருந்து (இன்று) 29ம் தேதி இரவு 9 மணி வரை தொடர்ந்து 4 நாட்களும், சேலம், திருப்பூர் மாநகராட்சிகளில் கடந்த 26-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இதனைபோல், கடலூர், திருவாரூர், தென்காசி, விழுப்புரம், நாகை, தஞ்சை, அரியலூர் ஆகிய மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு ஒருநாள் அமல்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் திருவாரூர்,  கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களுக்கு நாளை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். முழு ஊரடங்கு காலத்தில் மருந்து கடைகள், மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ், பத்திரிகைகள், தொலைக்காட்சி பணியாளர்களை தவிர வேறு யாரும் வெளியே வர அனுமதியில்லை. மளிகை கடை, காய்கறி கடை, பேக்கரி உள்ளிட்ட எந்த கடைகளும் திறக்கவும் அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: