ஹீரோக்களிடம் நிவாரண பொருள் திரட்டும் லாரன்ஸ்: 100 மூட்டை அரிசி வழங்கினார் ரஜினி

நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் கொரோன நிவாரண நிதியாக 3 கோடி ரூபாய் வழங்கி உள்ளார். இதுதவிர தென்னிந்திய நடிகர் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம் உள்ளிட் பல அமைப்புகளுக்கு ஒரு கோடி வரை நிதி வழங்கியுள்ளார். என்றாலும் அவரிடம் உதவி கேட்டு பலரும் அணுகுவதால் பெரிய ஹீரோக்களிடம் அரிசி உள்ளிட்ட பொருட்களை திரட்டுகிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

கொரோனா நிவாரண நிதிக்காக 3 கோடி ரூபாய் கொடுப்பதாக நான் அறிவித்த பிறகு சினிமா துறையில் இருக்கும் மற்ற யூனியன்களைச் சேர்ந்த பலரும் என்னை உதவிக்கு அணுகி வருகின்றனர். எனவே, இந்த 3 கோடி ரூபாய் தவிர்த்து விநியோகஸ்தர் சங்கத்துக்கு  15 லட்ச ரூபாயும், நடிகர் சங்கத்துக்கு 25 லட்ச ரூபாயும், தூய்மைப் பணியாளர்களுக்கு 25 லட்ச ரூபாயும் வழங்கியுள்ளேன்.

தற்போது செலவுகள் 4கோடி ரூபாயைத் தாண்டிவிட்டதால் லட்சுமி பாம் படக்குழுவினர் சார்பில் என்னுடைய கடைசித் தொகையை நேரடியாக பிரதமர் நிவாரண நிதிக்கு அனுப்பிவிடுமாறு வேண்டுகோள் விடுத்தேன். அவர்களும் அதை ஏற்றுக் கொண்டனர். எனக்கு உதவி கேட்டு கடிதங்கள், வீடியோக்கள் வந்து கொண்டிருக்கின்றன.  அவர்கள் பணமோ வேறு எதுவுமோ கேட்கவில்லை. அரிசியை வழங்குவதன் மூலம் அவர்கள் சமைத்துச் சாப்பிட முடியும். அதனால் அவர்களுக்கு நான் பொருள் திரட்ட இருக்கிறேன். இந்த யோசனையை ரஜினியிடம் சொன்னேன். அவர் 100 மூட்டை அரிசி அனுப்பி வைத்துள்ளார். மேலும் கமல், அஜித், விஜய், சூர்யா, இன்னும் அனைத்து நடிகர்கள், அரசியல்வாதிகள், உதவி செய்ய விரும்பும் அனைவரிடமும் நிவாரண பொருள் கேட்க இருக்கிறேன்.

Related Stories: