வேலியே பயிரை மேய்ந்தால் என்னா பண்றது.... பறிமுதல் மதுபாட்டில்களை திருடி விற்ற நாகை எஸ்ஐ, ஏட்டு அதிரடி இடமாற்றம்

நாகை: நாகையில் காவல் நிலையங்களில் இருந்த மதுபாட்டில்களை விற்பனை செய்த எஸ்ஐ, ஏட்டு இடமாற்றம் செய்யப்பட்டனர். ஊரடங்கு அமலில் இருப்பதால் தமிழகத்தில் 1 மாதத்துக்கும் மேலாக மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் குடிமகன்கள் திண்டாடி வருகின்றனர். ஏற்கனவே சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் அந்தந்த காவல் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளன. மதுபாட்டில் கிடைக்காமல் குடிமகன்கள் திண்டாடி வரும் நிலையில், காவல் நிலையங்களில் உள்ள மதுபாட்டில்களை சில காவலர்கள் கூடுதல் விலைக்கு விற்பதாக தகவல் வந்தது. இதனால் காவல் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள மது பாட்டில்களை அழித்து விட உத்தரவு வந்தது.

அதன்படி கடந்த 3 தினங்களாக மதுபாட்டில்கள் அழிக்கப்பட்டு வருகிறது. நாகை மாவட்டம் நாகூர் காவல் நிலையத்தில் ஏட்டாக இருந்தவர் அன்பழகன். சில மாதங்களுக்கு முன் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பறிமுதல் செய்யப்பட்ட 40 மதுபாட்டில்கள் நாகூர் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தன. இந்த பாட்டில்கள் நேற்று ஆயுதப்படை மைதானத்தில் அழிக்கப்பட்டது. அப்போது, 40 மதுபாட்டில்களில் சில பாட்டில்கள் குறைந்ததும், அந்த பாட்டில்களை அன்பழகன் சில நாட்களுக்கு முன் கூடுதல் விலைக்கு விற்றதும் விசாரணையில் தெரியவந்தது. அதேபோல் நாகை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் எஸ்ஐயாக பணியாற்றியவர் பார்த்திபன்.

உள்ளாட்சி தேர்தலின் போது கமுதிக்கு கடத்தப்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்து குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வைத்திருந்தனர். இந்த பாட்டில்களை தற்போது பார்த்திபன் கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது. இதையடுத்து எஸ்ஐ பார்த்திபன், ஏட்டு அன்பழகன் ஆகியோரை இடமாற்றம் செய்து எஸ்பி செல்வநாகரத்தினம் நேற்று உத்தரவிட்டுள்ளார். எஸ்ஐ பார்த்திபன் திருக்குவளை காவல் நிலையத்துக்கும், ஏட்டு அன்பழகன் ஆயுதப்படைக்கும் மாற்றப்பட்டனர்.

Related Stories: