அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர் தொழில் நிறுவனங்களை ஈர்ப்பதற்கு தலைமை செயலாளர் தலைமையில் குழு: முதல்வர் எடப்பாடி உத்தரவு

சென்னை: கொரோனா நோய் தாக்கத்திற்கு பின் அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா, தைவான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளின் தொழில் நிறுவனங்களை தமிழ்நாட்டிற்கு ஈர்க்க தலைமை செயலாளர் தலைமையில் சிறப்புக்குழு அமைத்து முதல்வர் எடப்பாடி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: உலக பொருளாதாரத்தில் கொரோனா நோய் பரவல் ஏற்படுத்தியுள்ள பெரும் தாக்கத்தால் பல வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள் தமது உற்பத்தி செயல்பாடுகளை பரவலாக்கும் பொருட்டு, குறிப்பிட்ட சில நாடுகளில் இருந்து இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு இடம்பெயர முடிவு செய்துள்ளனர்.

குறிப்பாக, தமிழ்நாட்டில் அதிக முதலீடு செய்துள்ள நாடுகளான ஜப்பான், தென் கொரியா, தைவான், சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை சார்ந்த தொழில் நிறுவனங்கள் தமது தொழிற்சாலைகளை இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு இடமாற்றம் செய்திட முடிவு செய்துள்ளதாக தெரிய வருகிறது.

இந்த சூழலில், தமிழ்நாட்டில் ஏற்கனவே அதிக முதலீடுகளை செய்துள்ள நாடுகளை சார்ந்த தொழில் நிறுவனங்களின் மீது சிறப்பு கவனம் செலுத்தி, அவர்கள் பிற நாடுகளில் இருந்து இடமாற்றம் செய்யும் தொழிற்சாலைகளை இங்கு ஈர்த்து, நம் இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிடும் பணிகளை முடுக்கிவிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி, இவ்வாறு இடம் பெயரும் தொழில் நிறுவனங்களை தமிழ்நாட்டில் தொழில் துவங்க ஈர்ப்பதற்கான வழிமுறைகளை கண்டறிந்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தலைமை செயலாளர் தலைமையில் “முதலீடுகளை ஈர்ப்பதற்கான சிறப்புக்குழு” ஒன்றினை அமைத்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இக்குழு இடம்பெயர வாய்ப்புள்ள நிறுவனங்களை கண்டறிதல், அவர்களை தமிழ்நாட்டிற்கு ஈர்ப்பதற்கு வழங்க வேண்டிய விரைவான ஒற்றைச்சாளர அனுமதிக்கான வழிமுறைகள், சிறப்பு சலுகைகள் மற்றும் அவர்களை ஈர்க்க வாய்ப்புள்ள தொழிற்பூங்காக்கள் மற்றும் உட்கட்டமைப்பு பணிகளை கண்டறிந்து விரைந்து செயல்படுத்தும் வழிமுறைகள் உள்ளிட்ட பணிகளை இந்த சிறப்புக்குழு மேற்கொள்ளும். இந்த சிறப்புக்குழு தனது முதற்கட்ட அறிக்கையை ஒரு மாதத்திற்குள் முதல்வரிடம் வழங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சிறப்பு குழுவில் யார், யார்?

கொரோனா நோய் தாக்கத்திற்கு பின் அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா, தைவான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளின் தொழில் நிறுவனங்களை தமிழ்நாட்டிற்கு ஈர்க்க அமைக்கப்பட்ட சிறப்பு குழுவில் தலைமை செயலாளர் சண்முகம் தலைவராக செயல்படுகிறார். நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர், தொழில்துறை முதன்மை செயலாளர், தமிழ்நாடு தொழில்துறை வழிகாட்டி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு குழும செயல் இயக்குனர், வணிகவரித்துறை ஆணையர், ஜப்பான் வெளிவர்த்தக அமைப்பு, கொரியாக வர்த்தக முதலீடு மேம்பாட்டு விளம்பர நிறுவனம், ெகாரியன் தொழில் வர்த்தக மையம் மற்றும் தைவான் வெளிவர்த்தக மேம்பாட்டு கவுன்சில் உள்ளவர்களில் தலா 2 பேரும்,

இந்தோ அமெரிக்கன் வர்த்தக மையம், அமெரிக்கா-இந்தியா பங்களிப்பு சம்மேளனம், அமெரிக்கா-இந்தியா வர்த்தக கவுன்சில் உள்ளவர்களில் தலா 2 பேரும், சிங்கப்பூர் தொழில் முனைவோர் குழுக்களில் தலா ஒருவரும், ஜப்பான் தொழில் பூங்கா, தமிழ்நாட்டின் ஜப்பானிய நிறுவனம், கொரிய நிறுவனம், அமெரிக்கா, தைவான் நிறுவனங்களில் தலா ஒரு பிரதிநிதியும் நியமிக்கப்படுகின்றனர்.

Related Stories: