100 கோடி தீயணைப்பு கருவிகள் வாங்கும் கூட்டம் ரத்து: தீயணைப்புத்துறை இயக்குநர் சைலேந்திரபாபு அதிரடி

சென்னை: தீயணைப்புத்துறையில் டெண்டரே இல்லாமல் தனியார் நிறுவனங்களுக்கு 100 கோடி மதிப்புள்ள கொரோனா தடுப்பு கிருமி நாசினி கருவிகள் வாங்க இருந்த கூட்டத்தை டிஜிபி சைலேந்திரபாபு நேற்று ரத்து செய்தார். மேலும், கட்டிடங்களுக்கு முறைகேடாக அனுமதி வழங்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை நடத்தவும் அவர் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை தடுக்க சுகாதாரம், உள்ளாட்சி, வருவாய், காவல்துறைகளுடன் தீயணைப்புத் துறையினரும் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனர். அதில் தீயணைப்புத் துறையினர் தீயணைப்பு கருவிகள் மூலம் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று கிருமி நாசினியை தெளித்து வருகின்றனர். இந்தநிலையில், 100 கோடிக்கு கிருமி நாசினி கருவிகள் வாங்க தமிழக அரசு தீயணைப்புத் துறைக்கு அனுமதி அளித்தது.

அதைத் தொடர்ந்து தீயணைப்புத் துறை இயக்குநர் சைலேந்திரபாபு, தீயணைப்பு கருவிகள் வாங்கும் பணியை, அவருக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகளிடம் ஒப்படைத்திருந்தார். பேரிடர் காலங்களில் டெண்டர் இல்லாமல் கருவிகள் வாங்க சட்டத்தில் இடம் உள்ளது. அதை பயன்படுத்தி, அதிகாரிகள், கருவிகளை நேரடியாக நிறுவனங்களிடம் வாங்க திட்டமிட்டு அதற்காக பேரத்தில் ஈடுபட்டிருந்தனர். பெரிய அளவில் பணமும் கைமாறியிருப்பதாக கூறப்பட்டது. மேலும், நிறுவனங்களுக்கு கருவிகள் வாங்க நேற்று நடைபெறும் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த முறைகேடுகள் குறித்து தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. அதைத் தொடர்ந்து, 100 கோடிக்கு கருவிகள் வாங்கும் கூட்டத்தை தீயணைப்புத் துறை இயக்குநர் சைலேந்திரபாபு நேற்று அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டார்.

கருவிகள் வாங்க புதிய விதிமுறைகளையும் அவர் வகுத்து அறிவித்துள்ளார். மேலும், கட்டிடங்களுக்கு தீயணைப்புத்துறை மூலம் தடையில்லா சான்றுகள் வழங்கப்படும். இந்த சான்றிதழ்கள் வழங்குவதில் பெருமளவில் முறைகேடுகள் நடந்துள்ளன. இது குறித்தும் தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இது குறித்தும் விசாரணை நடத்தும்படி அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த சம்பவங்கள் தீயணைப்புத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: