சென்னை, கோவை, மதுரை மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு முடிவு: இன்று மட்டும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் திறப்பு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: சென்னை, கோவை, மதுரை மாநகராட்சி பகுதிகளில் முழு ஊரடங்கு முடிந்த நிலையில், இன்று ஒருநாள் மட்டும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் திறந்திருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட நகர் பகுதிகளில் கொரோனா தொற்று வேகமாக பரவுவதை தடுக்கும் வகையில், சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகராட்சி பகுதிகளிலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட சில பகுதிகளிலும் கடந்த 26ம் தேதி அதிகாலை 6 மணி முதல் 29ம் தேதி (நேற்று) இரவு 9 மணி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. 4 நாட்கள் முழு ஊரடங்கு முடிந்த நிலையில் இன்று முதல் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்வதற்காக கடைகள் திறந்திருக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய மூன்று மாநகராட்சி பகுதிகளில் இன்று (நேற்று) இரவு வரை அமலில் இருக்கும் முழு ஊரடங்கு முடிவடையும் நிலையில், நாளை (இன்று) முதல் கடந்த 26ம் தேதிக்கு முன்பு இருந்த நிலைப்படி ஊரடங்கு தொடரும். எனினும், 30ம் தேதி (வியாழக்கிழமை) மட்டும் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களான காய்கறி, பழங்கள் மற்றும் மளிகை பொருட்களை வாங்குவதற்கு ஏதுவாக காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகள் திறந்திருக்க அனுமதிக்கப்படும். நாளை (1ம் தேதி) முதல் மேற்கண்ட அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதிக்கப்படும்.

Related Stories: