புதுச்சேரியில் சமூக இடைவெளியை காற்றில் பறக்க விடும் மீன் வியாபாரிகள்: எடையளவு கருவிகளை போலீஸ் பறிமுதல்

புதுச்சேரி: புதுச்சேரியில் பலமுறை எச்சரித்தும் மீன் வியாபாரிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் அரசின் உத்தரவை காற்றில் பறக்கவிட்டு வருகின்றனர். உப்பளம் அம்பேத்கர் சாலையில் மீன்களை வாங்க கும்பல் கூடிய நிலையில், அங்கிருந்து எடையளவு கருவிகளை பறிமுதல் செய்த போலீசார், 2 வியாபாரிகளை விசாரணைக்கு அழைத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நாடு முழுவதும் தேசிய ஊரடங்கு மே 3ம்தேதி வரை அமலில் உள்ளது. இருப்பிலும் சில அத்தியாவசிய பொருட்களின் விற்பனைக்கு மத்திய அரசு உத்தரவுக்கிணங்க தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி காய்கறி, மளிகை, பால், மீன்கள் வியாபாரம் செய்யப்பட்டு வருகின்றன.

 இருப்பினும் அங்கு சமூக இடைவெளி கடைபிடித்தல், மாஸ்க் அணிதல், கிருமி நாசினி தெளிப்பு உள்ளிட்ட விதிகளை கடைபிடிக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. ஆனால் அதை பெரும்பாலான வியாபாரிகள் காற்றில் பறக்கவிட்டு வியாபாரம் செய்வதால் கொரோனா வைரஸ் தொற்று அபாயம் ஏற்படும் சூழல் உருவாகி வருகின்றன. புதுச்சேரியில் உப்பளம் அம்பேத்கர் சாலை, கடலூர் ரோடு, மேட்டுப்பாளையம் உள்பட பல்வேறு இடங்களில் சாலையோரம் மீன் வியாபாரம் நடைபெற்று வருகின்றன. இங்கு மீன்களை வாங்க பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லும் நிலையில் அங்கு சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவதில்லை.

 

மாறாக கும்பலாக நின்றபடி மீன்களை வாங்கி அவற்றை வழக்கம்போல் அங்கேயே சுத்தம் செய்து வீட்டிற்கு எடுத்து செல்கின்றனர். இதனால் மீன் கடைகளை சுற்றிலும் பொதுமக்கள் கூட்டம் கும்பலாக நிற்பதை காண முடிகிறது. இதை பலமுறை போலீசார் எச்சரித்தும் மீன் வியாபாரிகளும், பொதுமக்களும் அதை அலட்சியப்படுத்தி வருகின்றனர். இதனிடையே இன்று உப்பளம் அம்பேத்கர் சாலை சவேரியார் கோயில் அருகே மீன் கடைகள் முன்பு அதிகளவில் மக்கள் திரண்டதால் போலீசுக்கு கிடைத்த தகவலின்பேரில் அங்கு ஒதியஞ்சாலை இன்ஸ்ெபக்டர் வெற்றிவேல் தலைமையிலான போலீசார் விரைந்து சென்றனர்.

அங்கிருந்த மீன் கடைகளில் எடையளவு கருவிகளை பறிமுதல் செய்த போலீசார், மீன்வாங்க கும்பலாக நின்றிருந்த பொதுமக்களை விரட்டியடித்தனர். எத்தனை முறை கூறினாலும் மீண்டும் மீண்டும் அரசின் விதிகளை கடைபிடிக்காமல் மீன் வியாபாரம் செய்வதா? என வியாபாரிகளை போலீசார் எச்சரித்தனர். அதற்கு பதிலளித்த மீன் வியாபாரிகள், அரசுதான் அனுமதி வழங்கி உள்ளதே? என கூறி எதிர்கேள்வி எழுப்பினர். அனுமதி வழங்கினாலும் அரசின் விதிகளை வியாபாரிகள் அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

இங்கு சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை, பெரும்பாலானோர் மாஸ்க் அணியால் நிற்கின்றனர் எனக் கூறி வியாபாரிகள் 2 பேரை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அவர்கள் மீது தடை உத்தரவை மீறியதாக வழக்குபதிவு செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். இச்சம்பவத்தால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

Related Stories: