சென்னையில் 4வது நாளாக மத்திய குழுவினர் ஆய்வு: டிஜிபி திரிபாதி, போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை

சென்னை:  தமிழகத்துக்கு தேசிய பேரிடர் மேலாண்மை கூடுதல் செயலாளர் திருப்புகழ் தலைமையில் டாக்டர் அனிதா கோகர், டாக்டர் சூரியபிரகாஷ் , லோகேந்தர் சிங், டாக்டர் விஜயன் ஆகிய 5 பேர் கொண்ட மத்திய குழுவினர் கடந்த 24ம் தேதி சென்னை வந்தனர். இவர்கள் சென்னையில் கடந்த 3வது நாளாக  கொரோனா வைரஸ் பரவல் குறித்து ஆய்வு செய்தனர். நேற்று 4வது நாளாக  தலைமை செயலாளர் சண்முகத்துடன் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷை சந்தித்து பேசினர். நேற்று இரண்டு குழுக்களாக மத்திய குழுவினர் சென்றனர்.

அதன்படி, சாந்தோம் நகர்ப்புற நலவாழ்வு மையம், நொச்சிகுப்பம் குடிசைமாற்றுவாரிய குடியிருப்பு மற்றும் அருகே உள்ள மருந்தகம், பாலவாக்கத்தில் உள்ள முதியோர் இல்லம், வரதராஜபுரம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு, புதுப்பேட்டை நகர்புற நலவாழ்வு மையம், ஹாரிங்டன் ரோடு முதியோர் இல்லம் ஆகிய இடங்களுக்கு சென்றனர். துரைப்பாக்கத்தில் வென்டிலேட்டர் தயாரிப்பு நிறுவனத்தையும் பார்வையிட்டனர்.  மாலை 5 மணிக்கு சென்னை, காமராஜ் சாலையில் டிஜிபி அலுவலகம் சென்று  டிஜிபி திரிபாதியை சந்தித்தனர். பின்னர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். கட்டுப்பாட்டு மையத்தையும் பார்வையிட்டனர்.

இன்றுடன் சென்னையில் ஆய்வு பணியை முடித்துக்கொள்ளும் மத்திய குழுவினர், மாலையே டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளனர். ஓரிரு நாளில் சென்னையில் கொரோனா தடுப்பு பணியில் அரசு எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்த ஆய்வு அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அளிப்பார்கள் என்று தெரிகிறது.

Related Stories: