மகாராஷ்டிராவில் இருந்து லாரியில் பழம் ஏற்றி வந்த 2 டிரைவர்களுக்கு கொரோனா? சலூன்கடைக்காரருக்கும் பாதிப்பு: கோயம்பேடு மார்க்கெட்டில் பரபரப்பு

சென்னை: மகாராஷ்டிராவில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பழம் ஏற்றி வந்த 2 பேர் மற்றும் ஒரு சலூன் கடைக்காரருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பரபரப்பு நிலவியது. மகாராஷ்டிர மாநிலத்தில் பழங்களை ஏற்றிக்கொண்டு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நேற்று அதிகாலை ஒரு லாரி வந்தது. அதில், 2 டிரைவர்களுக்கும் கொரோனா நோய் தொற்று காரணமாக சளி, இருமல், காய்ச்சலினால் பெரிதும் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது. இதேபோல் அப்பகுதியில் சலூன் கடை வைத்திருக்கும் ஒரு வாலிபருக்கும் நோய் தொற்று இருப்பது தெரியவந்தது. இதில் பயந்துபோன வியாபாரிகள், காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து கோயம்பேடு இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் தலைமையில் தனிப்படை போலீசார் மற்றும் சுகாதார ஆய்வாளர் சக்திவேல் ஆகியோர் தலைமையில் சுகாதார ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். 3 பேரையும் ரத்த பரிசோதனை செய்ய, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பாதுகாப்புடன் அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு கொரோனா நோய் தொற்று உள்ளதா என ரத்த பரிசோதனை செய்யப்பட்டு, அங்குள்ள சிறப்பு வார்டில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, கோயம்பேடு மார்க்கெட்டில் கிருமிநாசினி தெளித்து தூய்மை பணிகள் நடந்து வருகின்றன. இதனால் நேற்று காலை கோயம்பேடு மார்க்கெட்டில் பெரும் பரபரப்பு நிலவியது

Related Stories: