5 மாநிலங்களின் விருப்பம் நிறைவேற்றமா?; நிராகரிப்பா?: ஊரடங்கு தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி மீண்டும் ஆலோசனை

புதுடெல்லி: மே 3-ம் தேதி முடியவுள்ள ஊரடங்கை  நீட்டிப்பதா? தளர்த்துவதா? என்பது குறித்து பிரதமர் மோடி மீண்டும் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை  நடத்து வருகிறார். கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் வரும் 3ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அந்தந்த மாநிலங்களில் கொரோனா நோய் தொற்று பரவும் சூழலை கருத்தில் கொண்டு பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசுகள்  மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், டெல்லியில் மே 16ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், மேலும் சில மாநிலங்களும் ஊரடங்கை நீட்டிப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், மேற்கு வங்கம், பஞ்சாப் மற்றும்  ஒடிசா மாநிலங்கள் மே 3க்கு பின்னரும் ஊரடங்கினை தொடருவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. குஜராத், ஆந்திரா, தமிழ்நாடு, அரியானா, இமாச்சலப் பிரதேசம்  மற்றும் கர்நாடகா மாநிலங்கள் மத்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்றும் என அறிவித்துள்ளன. தெலங்கானா மாநிலத்தில் மட்டும் ஊரடங்கை நீட்டித்து அரசு  ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

பிரதமருடனான ஆலோசனைக்கு பின் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முடிவு செய்ய அசாம், கேரளா மற்றும் பீகார் மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன.  இந்நிலையில், டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி, அனைத்து மாநிலம் மற்றும் யூனியன்பிரதேச முதல்வர்களுடன் வீடியோ  கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஊரடங்கு நீட்டிப்பு குறித்தும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், ஊரடங்கால்  வீட்டில் முடங்கியுள்ள மக்களுக்கு நிதியுதவி வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும்,  முதல்வர்களுடன் ஆலோசனை நடத்திப்பின்னர் இன்று அல்லது நாளை ஊரடங்கு தொடர்பாக நாட்டு மக்களுடன் பிரதமர் மோடி உரையாற்றுவார் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: