ஏழைகள் உணவுக்கு கஷ்டப்படும் ஊரடங்கு நேரத்தில் ஓட்டல்களில் குறைந்த விலையில் பார்சல் சாப்பாடு விற்க கோரி வழக்கு: உயர் நீதிமன்றம்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல் ராம.சிவசங்கர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கு மட்டும் மதியம் 1 மணிவரை கடைகளை திறந்துவைக்க அனுமதி தரப்பட்டுள்ளது. ஓட்டல்களில் பார்சலில் உணவுகளை விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் உணவுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் ஆயிக்கணக்கானோர் ஓட்டல்களை நம்பியே உள்ளனர். இந்நிலையில் பார்சல் சாப்பாடுகளை விற்பனை செய்யும் பல ஓட்டல்கள் பார்சல்களின் விலையை உயர்த்தி விற்பனை செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஊரடங்கால் தங்களுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை சரி செய்ய பார்சல் உணவுகளின் விலையை உயர்த்தி விற்பனை செய்வதாக தகவல்கள் வந்துள்ளன.

இது ஓட்டல்களையே நம்பி வாழும் இளைஞர்களுக்கும், குடும்பத்தினருக்கும் கூடுதல் கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்க கோரி கடந்த 12ம் தேதி தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். எந்த பதிலும் இல்லை. எனவே, ஓட்டல்களில் குறைந்த விலையில் பார்சல்களை விற்பனை செய்யுமாறு ஓட்டல்களுக்கு உத்தரவிட அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும், ஓட்டல்கள் அதன் அருகில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக உணவுகளை வழங்க அறிவுறுத்துமாறும் அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், நிர்மல்குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் சம்பத்குமார் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கில் தமிழக அரசு பதில் தருமாறு உத்தரவிட்டனர்.

Related Stories: