நாளை அட்சய திருதியை: ஆன்லைன் மூலம் தங்கம் விற்பனை: நகைக்கடை உரிமையாளர்கள் தீவிரம்

சென்னை: அட்சய திருதியையொட்டி, ஆன்லைன் மூலம் தங்கம் விற்பனை செய்யும் பணிகளில், நகை கடை உரிமையாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், மே 3ம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தங்க நகை கடைகள் உள்பட பல்வேறு வணிக நிறுவனங்கள், திறக்கப்பட முடியாத சூழல் உள்ளது. நாளை அட்சய திருதியை என்பதால், விழாவை, வீடுகளில் இருந்தபடி மக்கள் கொண்டாட வேண்டிய நிலை உள்ளது. இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சி மாவட்ட நகை கடை உரிமையாளர்கள், ஆன்லைன் மூலம் நகை விற்பனை செய்வதாக வாடிக்கையாளர்களின் செல்போன்களுக்கு, வாட்ஸ் ஆப், பேஸ்புக், எஸ்எம்எஸ் போன்ற சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்து வருகின்றனர்.

இதில், போனில் தொடர்பு கொண்டு, முன்பதிவு செய்ய வேண்டும். தொடர்ந்து, ஆன்லைன் மூலம் தற்போதைய தங்க நகை விலைக்கு, தங்க காசு, நகைகளுக்கு பணம் செலுத்த வேண்டும். இந்த தங்க நகைகள், அட்சய திருதியை நாளில் லட்சுமி குபேர பூஜையில் வைத்து பூஜை செய்யப்படும்.

அட்சய திருதியை நகைகள் அனைத்தும், ஊரடங்கு உத்தரவு நீங்கிய பின் அல்லது தமிழக அரசு கடைகள் திறக்க அனுமதி வழங்கிய பின், கடைகளில் வந்து பெற்றுக்கொள்ளலாம் என வாடிக்கையாளர்களுக்கு தங்களின் வங்கி கணக்கு விபரங்களுடன் தகவல் அனுப்பி வருகின்றனர். பெரிய அளவில் வர்த்தகம் செய்யும் நகை கடையினர் தான், ஆன்லைன் மூலம் நகை விற்பதாக, விளம்பரம் செய்கின்றனர். சிறிய அளவில் கடை வைத்துள்ள நபர்கள், அட்சய திருதியையில் நகை விற்க முடியாததால் செய்வதறியாமல் உள்ளனர். இதுகுறித்து, நகை கடை உரிமையாளர்கள் கூறுகையில், கடந்த, 2019ல் அட்சய திருதியை நாளில், தமிழகம் முழுவதும், 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள, 5,500 கிலோ தங்கத்தை மக்கள் வாங்கிச் சென்றனர். இதில், 48 சதவீதம் தங்க காசுகள், 52 சதவீதம் ஆபரணங்களாக விற்பனையாகின. நடப்பாண்டு கொரோனா வைரஸ் காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவுக்கு பின், மார்ச் 25 முதல் கடைகள் மூடப்பட்டன. இதனால், தங்க நகை விற்பனை அடியோடு சரிந்துவிட்டது. ஆன்லைன் மூலம் தங்க காசு, நகை விற்பனை செய்து வருகிறோம். இந்த நகைகள், கடை திறப்புக்கு பின் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: