கொரோனா தொற்று தாக்கம் அதிகரிப்பு எதிரொலி சென்னையில் அனைத்து சாலைகளுக்கும் சீல்: தடுப்புகள் அமைத்து போலீசார் சோதனை

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் வருகிற 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக சென்னையில் பாதிக்கப்படுபவரின் எண்ணிக்கை வேறு அதிகரித்து வருகிறது. இதையடுத்து போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி மாநகரம் முழுவதும் 160க்கும் மேற்ப்பட்ட இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு அனுமதி அளித்த நபர்கள் அவர்களுக்கு அரசு சார்பில் அளித்த அடையாள அட்டை மற்றும் முககவசம் அணிந்திருந்தால் மட்டுமே அனுமதிக்கின்றனர்.அண்ணாசாலையை சுற்றியுள்ள பகுதிகளில் கொரோனா தொற்று தீவிரமாக உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து சைதாப்பேட்டை சின்னமலை முதல் பல்லவன் இல்லம் வரை சுமார் 15 கிலோமீட்டர் நீளம் உள்ள அண்ணாசாலையில் எந்தவித போக்குவரத்துமின்றி தடை செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

சின்னமலை முதல் பல்லவன் இல்லம் வரை அண்ணாசாலையை இணைக்கும் இணைப்பு சாலைகள் அனைத்தும் தடுப்புகள் வைத்து மூடப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை அண்ணா மேம்பாலத்தில் இருந்து திருவல்லிக்கேணி வாலாஜா சாலை வரை உள்ள சிக்னல் வரையும் மூடப்பட்டுள்ளது. இதையடுத்து வரும் 26,27,28,29ம் தேதிகளில் சென்னை, கோவை, திருப்பூர், மதுரை, சேலம் ஆகிய பகுதிகளில் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் முதன்மை சாலைகளான பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஆற்காடு சாலை, காமராஜர் சாலைகளில் இணைப்பு சாலைகள் அனைத்தும் நேற்று மூடி சீல் வைக்கப்பட்டன.

அதே போல நேற்று பிற்பகல் 1 மணிக்கும் மேல் சென்னையில் பெரும்பாலான இடங்களில் உள்ள முக்கிய சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. கம்புகள், பேரிகார்டுகள் அமைத்து தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் சிமென்ட் கற்களை கொண்டு வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். அது மட்டுமல்லாமல் அந்த இடங்களில் போலீசார் பாதுகாப்புக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால், தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் தடுப்புகளை மீறி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வாகனங்களில் ெசல்பவர்கள் ஏன் வெளியே வந்தோம் என்று சங்கடப்படும் வகையில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவு பெருகியுள்ளது. அதே நேரத்தில் தடையை மீறி தேவையில்லாமல் வெளியே வருபவர்களுக்கு தண்டனையை மேலும் அதிகப்படுத்த வேண்டும் என்றும்மக்கள் தரப்பில்  கோரிக்கை எழுந்துள்ளது.

பல சாலைகளில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் வாகனத்தில் வந்தவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், பல இடங்களில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களுக்கு போலீசார் அறிவுரை கூறி திருப்பி அனுப்பி வைத்தனர். இதனால், நேற்று ஒரு மணிக்கு மேல் வாகன போக்குவரத்து என்பது அடியோடு முடங்கியது. இதனால், அனைத்து சாலைகளும் ெவறிச்சோடி காணப்பட்டன. நாளை முதல் சென்னையில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், இன்று காய்கறி, மளிகை சாமான்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்க கூட்டம் அதிகமாக காணப்படும் என்று கூறப்படுகிறது. எனவே, காய்கறி, மளிகை கடைகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

Related Stories: