தமிழகத்தில் தெரிந்தது பிறை; ரமலான் நோன்பு இன்று அதிகாலை முதல் தொடக்கம்...வீடுகளிலிருந்தபடியே இஸ்லாமியர்கள் கடைபிடிப்பு

சென்னை: ரமலான் நோன்பு இன்று அதிகாலை முதல் தொடங்கியது. ரமலான் நோன்பு என்பது இசுலாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமலான்  மாதம் முழுவதும் இசுலாமியர்களால் நோற்கப்படும் நோன்பு ஆகும். இந்நாட்களில் நோன்பு அனுசரிப்பவர்கள் காலையில், சூரிய உதயத்துக்கு முன்பிருந்து,  சூரியன் மறையும் நேரம் வரை, உணவு, தண்ணீர் எதுவும் உட்கொள்ளாமல், நோன்பு கடைப்பிடிப்பர்.

இந்த நாட்களில், ஒவ்வொரு நாளும், ஐந்து வேளை தொழுகை மட்டுமின்றி, இரவிலும் சிறப்பு தொழுகை நடத்தி, பிரார்த்தனை செய்வது வழக்கம். இது  இசுலாமின் ஐந்து அடிப்படை கடமைகளில் மூன்றாவது கடமை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டுக்கான ரமலான் நோன்பு, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு  எமிரேட்ஸ், கத்தார், குவைத் உள்ளிட்ட நாடுகளில் வெள்ளிக்கிழமை நேற்று தொடங்கியது.

இந்நிலையில், தமிழகத்தில் வெள்ளிக்கிழமை நேற்று மாலை பிறை தெரிந்ததாக தமிழக அரசின் தலைமை காஜி சலாஹுத்தீன் முஹம்மது அயூப் அறிவித்தார்.  மேலும், தமிழகத்தில் ரமலான் நோன்பு, சனிக்கிழமை இன்று தொடங்கும் என்று தெரிவித்தார். இதற்கிடையே, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா  பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மசூதிகளில் தொழுகை நடத்த வேண்டாம் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால்,  இஸ்லாமியர்கள் வீடுகளிலிருந்தபடியே நோன்பைக் கடைபிடிக்க உள்ளனர்.

Related Stories: