கொரோனா தடுப்பு நடவடிக்கையாக உயிரியல் பூங்கா கூண்டுகளில் வேப்பிலை கட்டிய ஊழியர்கள்: மஞ்சள் நீர் தெளித்து முன்னெச்சரிக்கை

சேலம்: சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வனஉயிரினங்கள் உள்ள கூண்டுகளில் மஞ்சள்நீர் தெளித்தும், வேப்பிலை கட்டியும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். சேலம் குரும்பப்பட்டி வனஉயிரியல் பூங்கா சுமார் 31 ஹெக்டேர் பரப்பளவில் உள்ளது. இந்த பூங்காவில் புள்ளிமான், கடமான், குரங்கு, மயில், நரி, வெளிநாட்டு பறவைகள் மற்றும் மலைப்பாம்புகள் என 150க்கும் மேற்பட்ட வன உயிரினங்கள் கூண்டுகளில் அடைத்து பராமரிக்கப்படுகின்றன. இங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக வன உயிரினங்கள் உள்ள கூண்டுகளில் ஊழியர்கள் மஞ்சள் நீர் தெளித்தும், வேப்பிலை கட்டியும் வருகின்றனர்.

மேலும், பூங்கா முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்து வருகிறது. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘குரும்பப்பட்டி வனஉயிரியல் பூங்காவில் சுமார் 150க்கும் மேற்பட்ட வனஉயிரினங்கள் பராமரிக்கப்படுகின்றன. விலங்குகளுக்கு பாதிப்பை தடுக்கும் வகையில் கூண்டுகளில் மஞ்சள் நீர் தெளிப்பு, வேப்பிலை கட்டி கிருமி பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வனஉயிரினங்களுக்கு உணவுகள் வழங்கும்போது சமூக இடைவெளி கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பூங்காவில் உள்ள வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. காய்கறிகளை சுத்தமான நீரிலும், மாமிசங்களை சுடுநீரிலும் கழுவிய பின்னரே வழங்கப்படுகிறது. வனஉயிரியல் பூங்காவில் பணியாற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது, பூங்காவில் ஊழியர்கள் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டு, சுழற்சி முறையில் பணி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவர்களும் உயிரினங்களின் உடல் நலனை பரிசோதித்து வருகின்றனர்,’’ என்றனர்.

Related Stories: