குமாரபாளையம் சோதனை சாவடியில் சிக்கினர் கோவையில் இருந்து சைக்கிளில் ஒடிசா செல்ல முயன்ற இளைஞர்கள்

* மீன்பாடி வண்டியில் உ.பிக்கு புறப்பட்ட  குடும்பம் முகாமில் அடைப்பு

குமாரபாளையம்: ஊரடங்கால் வேலை இழந்து கோவையில் தவித்த ஒடிசாவைச் சேர்ந்த 11 இளைஞர்கள், சைக்கிளில் சொந்த மாநிலத்துக்கு புறப்பட்டனர். அவர்களை குமாரபாளையத்தில்  மடக்கிப் பிடித்த போலீசார், கோவைக்கே திருப்பி அனுப்பினர். அதேபோல், மீன்பாடி வண்டியில் குழந்தைகளுடன் உத்தர பிரதேச மாநிலத்திற்கு செல்ல வந்த குடும்பத்தினரை, முகாமில் தங்க வைத்தனர். ஊரடங்கு உத்தரவு காரணமாக கோவை, திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இங்கு வேலை செய்து வந்த வடமாநில தொழிலாளர்கள்

நிர்க்கதியாய் தவித்து வருகின்றனர். இந்நிலையில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 11 இளைஞர்கள், கோவையில் உள்ள தனியார்  நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.  ஊரடங்கால் கடந்த ஒரு மாதமாக வேலையின்றி தவித்த அவர்கள், உணவுக்கு கூட வழியின்றி அவதிப்பட்டனர்.  இதனையடுத்து, சொந்த மாநிலத்திற்கே செல்ல 11 பேரும் ஆளுக்கொரு சைக்கிளை வாங்கி, நேற்று முன்தினம் பயணத்தை தொடங்கினர். ஈரோடு  மாவட்டம் நசியனூர் அருகே நேற்று முன்தினம் இரவு வந்தபோது, சோர்ந்து விட்டனர். அந்த வழியாக வந்த சங்ககிரியை சேர்ந்த சரக்கு லாரியை நிறுத்தி,  தங்களை ஏற்றிச்செல்லும்படி டிரைவரிடம் கெஞ்சினர். இதனால் மனமிறங்கிய டிரைவர்,  சைக்கிள்களுடன் இளைஞர்களை லாரியில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சோதனை சாவடியில் லாரியை போலீசார் சோதனை செய்த போது, ஒடிசா மாநில இளைஞர்கள் சிக்கினர், நகராட்சி திருமண மண்டபத்தில் தங்க வைத்து, உணவு வழங்கினர். பரிசோதனைக்குப்பின் கோவையில் அந்த  இளைஞர்கள் பணியாற்றிய உரிமையாளரிடம் தாசில்தால் தொலைபேசியில் பேசி, ஊரடங்கு காலம் முடியும் வரை, தேவையான உதவிகள் வழங்கி பராமரிக்கும்படி கேட்டுக்கொண்டார். பின்னர், நேற்று காலை 11 இளைஞர்களும் மீண்டும் கோவைக்கே அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதேபோல், நேற்று காலை 4 மீன்பாடி வண்டியில் 4 பெண்கள், 2 குழந்தைகள் உள்பட 21  பேர் குமாரபாளையம் சோதனைச்சாவடிக்கு வந்தனர். அவர்களிடம்  போலீசார் நடத்திய விசாரணையில், உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள்  என்றும், கோவையில் கரும்பு ஜூஸ் விற்பனை செய்து வந்ததாகவும், ஊரடங்கால் வேறு வழியின்றி மீன்பாடி வண்டியிலேயே சொந்த மாநிலத்திற்கு செல்வதாகவும் கூறினர். போலீசார், அவர்களை நகராட்சி  திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்று உணவு வழங்கினர்.

Related Stories: