வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை தொடர்பான தகவல்கள் தவறு என்று நினைக்கிறேன்; அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து

வாஷிங்டன்: வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் சமீபத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டார். அவருக்கு இருதய பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இரும்புத்திரை கொண்ட நாடு என்பதால், அங்கிருந்து எந்த செய்தியும் முறைப்படி வெளியாவது கிடையாது. எல்லாமே யூகங்கள் மற்றும் உளவாளிகள் கூறும் தகவல்களின் அடிப்படையில்தான் உலகத்துக்கு தெரிய வருகின்றன. இந்த வகையில், கிம் ஜாங் உன் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பின்னர் உடல்நலம் தேறிய நிலையில், திடீரென மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டார்.

இதனால் அவர் கடந்த 11ம் தேதியில் இருந்து வெளி நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளவில்லை. தற்போது அவருக்கு ரகசிய இடத்தில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது என்று அமெரிக்காவின் சி.என்.என் செய்தி நிறுவனம் கூறியுள்ளது. வடகொரியாவின் தந்தை என்றழைக்கப்படும் கிம் இல் சங்கின் பிறந்த நாள் விழா கடந்த 15ம் தேதி நடந்தது. இவர் அதிபர் கிம் ஜாங் உன்னின் தாத்தா. எந்த ஆண்டும் தாத்தாவின் பிறந்த நாள் விழாவை மட்டும் கிம் ஜாங் உன் கொண்டாடாமல் இருந்தது இல்லை. ஆனால், முதல் முறையாக இந்த ஆண்டு நாட்டின் தந்தை பிறந்த நாள் விழாவில் கிம் ஜாங் உன் கலந்து கொள்ளவில்லை. அப்போதே நாட்டு மக்களுக்கு பெரும் சந்தேகம் இருந்தது.

அண்டை நாடுகளான தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்டவை இதுகுறித்து தோண்டித் துருவி விசாரிக்க ஆரம்பித்தன. இதில்தான் கிம் ஜாங் உன் கவலைக்கிடமாக இருப்பது தெரியவந்தது. இதனால் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங், அதிகாரத்தை கைப்பற்ற முயற்சி மேற்கொண்டுள்ளதாகவும், இதற்கு சில ராணுவ தளபதிகள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், வடகொரியா அதிபர் குறித்து வரும் செய்திகள் அனைத்தும் உண்மைக்கு மாறானவை என்று அண்டை நாடான தென்கொரியா கூறியுள்ளது.

எனினும், கிம் உடல்நிலை பற்றிய உண்மை முழுவதும் தெரியாத நிலையே உள்ளது. இந்த விவகாரம் தெடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப், ”கிம் உடல்நிலை தொடர்பான தகவல்கள் தவறு என்று நினைக்கிறேன். நான் அதை அப்படியே எடுத்துக்கொள்கிறேன். அவர்கள் பழைய ஆவணங்களை பயன்படுத்தியுள்ளனர் என்று கேள்விப்பட்டேன்” என்று அவர் கூறியுள்ளார்.

Related Stories: