பிளாஸ்மா சிகிச்சை எப்படி செய்யப்படுகிறது?: விளக்குகிறார் சிறப்பு மருத்துவர் ஜாய் வர்கீஸ்

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பயங்கரம் இன்று உலகம் முழுவதும் பரவி ஆட்டிப்படைக்கிறது. கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. முழுமையான பலன் தரும் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஒன்றரை ஆண்டு காலம் ஆகலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் பிளாஸ்மா சிகிச்சை முறை கொரோனா தடுப்புக்கு சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது. பிளாஸ்மா சிகிச்சை தொடர்பாக ஆய்வு செய்துவரும் கல்லீரல் மாற்று சிகிச்சை சிறப்பு மருத்துவர் ஜாய் வர்கீஸ் இதுகுறித்து விளக்குகிறார்.பிளாஸ்மா சிகிச்சை என்பது என்ன?கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டவரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். அவரது நோய் எதிர்ப்பு அணுக்களை அடையாளம் கண்டு, அவற்றைப் பிரித்தெடுத்து கொரோனா நோயாளிகளுக்குக் கொடுத்து சிகிச்சை அளிப்பதே பிளாஸ்மா சிகிச்சை எனப்படுகிறது. இந்த சிகிச்சை முறையானது ஏற்கெனவே மெர்ஸ், சார்ஸ் போன்ற வைரஸ் தொற்று ஏற்பட்ட போது நல்ல பலனைக் கொடுத்துள்ளது.

பிளாஸ்மா சிகிச்சை எவ்வாறு  செயல்படுகிறது?

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்த நபர்களின் ரத்தம் நடுநிலைப்படுத்தும் எதிர்ப்பணுக்களை கொண்டிருக்கும். இது ஒரு செயலற்ற ஆன்டிபாடி சிகிச்சையாக செயல்படும். இதுவே கொரோனாவுக்கான கன்வெலசென்ட் செரா (Convalescent Sera) என்று அழைக்கப்படுகிறது. இதுவே இந்த சிகிச்சைக்கான அடிப்படை.

நோய் பாதிப்பிலிருந்து மீண்டவரின் உடலிலிருந்து ரத்தத்தை எப்படி சேகரிப்பார்கள்?

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவரின் உடலிலிருந்து புரதம் நிறைந்த ரத்தத்தை இரண்டு வழிகளில் சேகரிக்கலாம். அதில் ஒன்று, மைய விலக்கு நுட்பம் என்கிற Centri fuge technique. இம்முறையைப் பயன்படுத்தி வழக்கமான ரத்தத்தை திரும்ப பெறுதல் என்கிற வழியை உபயோகிக்கலாம். இதில் நாம் 180 மில்லி லிட்டர் முதல் 220 மில்லி லிட்டர் வரையிலான புரதம் நிறைந்த ரத்தத்தை சேகரிக்க முடியும். மேலும் அதை மைனஸ் 60 டிகிரி செல்சியஸில் ஒரு வருடம் வரை சேமித்து வைத்திருக்க முடியும். இரண்டாவது, அப்ரிசஸ் எந்திரம்/செல் பிரிப்பான் எந்திரத்தை (Aphresis machine/ cell separator) பயன்படுத்தி நாம் ஒரு தடவையில் 600 மில்லி லிட்டர் ரத்தத்தை சேகரித்து, ஒரு வருடம் வரையிலும் சேமிக்க முடியும்.

கொரோனா நோயாளிகளுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படும்?

உலக அளவில் தற்போது வரை இதற்கான எந்த துல்லியமான தகவலும் இல்லை. ஹெப்படைட்டிஸ் பி வைரஸில் நமக்கு இருக்கும் அனுபவத்தின் அடிப்படையில் இதில் ஒரு முடிவு எடுக்கலாம். கொரோனா வைரஸ் பாதித்த நபர்களுக்கு நாள் ஒன்றுக்கு ஒரு முறை வீதம், தொடர்ச்சியாக குறைந்தபட்சம் 3 அல்லது 5 நாட்களுக்கு, 180 முதல் 220 மில்லி லிட்டர் கன்வெலசென்ட் செராவை செலுத்தலாம். பிளாஸ்மா பரிமாற்ற சிகிச்சை பற்றியும் பேசுகிறார்களே…

பிளாஸ்மாவில் இருக்கும் இறுக்கமாக பிணைக்கப்பட்டுள்ள அசாதாரணமான பொருட்களை அகற்றுவது சிகிச்சை பிளாஸ்மா பரிமாற்றம் (Therapeutic Plasma Exchange) என்று அழைக்கப்படுகிறது.

இந்த இரண்டில் சிறந்த சிகிச்சை எது?

இரண்டுமே முக்கியம். கொரோனா பாதித்த நபருக்கு கன்வெலசென்ட் செராவை பயன்படுத்துவதுடன், பிளாஸ்மா பரிமாற்ற தொழில்நுட்பத்திலும் சிகிச்சை அளிப்பதால் `சுவாச பிரச்னையை’’ குறைத்து வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்க முடியும்.

பிளாஸ்மா சிகிச்சையில் இருக்கும் வேறு நன்மைகள் என்ன?

இதற்கான செலவு மிகக் குறைவு, விரைந்து செய்யக்கூடியது, எந்தவிதமான பக்க விளைவுகளும் இல்லை, தடுப்பூசியைப் போலவே முறையாக பராமரித்து கன்வெலசென்ட் செராவை நாட்டில் உள்ள எந்த பகுதிக்கும், உலக அளவிலும் எளிதாக கொண்டு செல்லலாம். இவையெல்லாம் இதில் இருக்கும் சாதகமான அம்சங்கள்.

பிளாஸ்மா சிகிச்சை எப்போது நடைமுறைக்கு வரும்?

பிளாஸ்மா சிகிச்சையை கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டு, வென்டிலேட்டர் பொருத்தப்பட்ட நோயாளிகளுக்கு மட்டுமே ஒரு சில நாடுகளில் இப்போது சோதனை அடிப்படையில் பரிசோதனை நடத்திக் கொண்டிருக்கின்றனர். இம்முறை வெற்றிகரமாக முடிய வேண்டும். அதேபோல் நோயிலிருந்து முழுவதுமாக குணமடைந்த 3 வாரங்களுக்குப் பின்னர்தான் அவரிடமிருந்து ரத்தத்தை பெற முடியும். இதுபோன்ற சில கட்டுப்பாடுகளையும் பின்பற்ற வேண்டியிருப்பதால் பிளாஸ்மா சிகிச்சை நடைமுறைக்கு வர இன்னும் சில நாட்கள் தேவைப்படும். ஆனால், கூடிய விரைவில் நடைமுறைக்கு வந்து நமக்குப் பலன் கொடுக்கும் என்று நம்பிக்கையோடு இருக்கலாம்.

Related Stories: