எண்ணெய், இரும்பு, சிமென்ட், டயர் உள்ளிட்ட தொழிற்சாலைகள் செயல்பட அனுமதி

* தொழிலதிபர்களுடன் நடந்த ஆலோசனைக்குப் பின் தமிழக அரசு அறிவிப்பு

* ஓரிரு நாட்களில் ஆலைகள் இயங்கத் தொடங்கும்

சென்னை: தமிழகத்தில் குறைந்த அளவு பணியாளர்களை கொண்டு பாதுகாப்புடன் எண்ணெய், இரும்பு, சிமென்ட், டயர் உள்ளிட்ட தொழிற்சாலைகள் நிபந்தனைகளுடன் இயங்கலாம் என்று தொழிலதிபர்களுடன் முதல்வர் எடப்பாடி ஆலோசனை நடத்திய பிறகு தமிழக அரசு அரசாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டன. இதன்மூலம், சமூக பரவல் ஏற்படாது என்பதால் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கொரோனா பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்தது. இதைத்தொடர்ந்து, ஊரடங்கு உத்தரவு வரும் மே 3ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும், கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தால் ஊரடங்கு உத்தரவை தளர்த்தி ஏப்ரல் 20ம் தேதி முதல் தொழிற்சாலைகளை ஒரு சில கட்டுப்பாடுகளுடன் இயக்க அனுமதிக்க தமிழக அரசு முடிவு செய்தது.

ஆனால், தற்ேபாதைய சூழ்நிலையில் தொழிற்சாலைகள் திறந்தால் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தனர். இதனால், ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தும் முடிவை தமிழக அரசு கைவிட்டது. ஆனாலும், தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், தொழிற்சாலைகளை நிபந்தனையுடன் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், தமிழகத்தில் எந்தெந்த பணிகளுக்கு தளர்வு அளிக்கலாம் என்பது குறித்து ஆய்வு செய்து அரசுக்கு தகவல் தெரிவிக்க, நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் 21 பேர் குழுவும் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை, தலைமை செயலகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், நோய் தொற்று பரவாமல் இருக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாகவும், மத்திய அரசு சில தொழிற்சாலைகளுக்கு விலக்கு அளித்துள்ளதன் அடிப்படையில் தமிழகத்தில் சில தொழிற்சாலைகளை படிப்படியாக அனுமதிப்பது தொடர்பாகவும் டி.வி.எஸ். குழுமத்தின் தலைவர் வேணு சீனிவாசன், முருகப்பா குழுமத்தின் தலைவர் வெள்ளையன், டி.வி.எஸ். அன்ட் சன்ஸ் நிறுவனத்தின் இணை மேலாண் இயக்குநர் தினேஷ், ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் வெங்கடராமராஜா, தோல் ஏற்றுமதி குழுமத்தின தலைவர் அகீல் அகமது, இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவர் ஹரி தியாகராஜன், இந்தியா சிமென்ட் நிறுவனத்தின் தலைவர் சீனிவாசன் ஆகிய தொழிலதிபர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் நேற்று காலை ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமை செயலாளர் சண்முகம், நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் கிருஷ்ணன், தொழில் துறை முதன்மை செயலாளர் முருகானந்தம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்வரிடம் பேசிய தொழிலதிபர்கள், தமிழகத்தில் தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலை குறித்து விரிவாக விளக்கம் அளித்தனர். குறிப்பாக தொடர்ந்து தொழிற்சாலைகள் மூடப்பட்டு இருந்தால் ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாத  நிலை ஏற்பட்டுள்ளதுடன், பொருளாதார சிக்கலும் ஏற்படும். எனவே, இரும்பு, சிமெண்ட், டயர், கண்ணாடி, உரம் உள்ளிட்ட சில முக்கிய தொழிற்சாலைகளை ஒரு சில நிபந்தனைகளுடன் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். தொழிலதிபர்களின் கோரிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் ஏற்றுக் கொண்டுள்ளார். இதையடுத்து, முதல்வர் - தொழிலதிபர்கள் ஆலோசனை கூட்டம் முடிந்ததும் நேற்று பிற்பகல் தமிழக தலைமை செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையொட்டி அனைத்து நிறுவனங்களும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுமக்களின் அத்தியாவசிய தேவைக்கான பொருட்கள் மற்றும் விற்பனை மட்டும் தளர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தொடர் உற்பத்தி பணியில் ஈடுபட்டிருக்கும் தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிப்பது குறித்து மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

அதை ஏற்று, எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், பெரிய இரும்பு ஆலைகள், சிமெண்ட் உற்பத்தி ஆலை, சர்க்கரை உற்பத்தி, பெயிண்ட், உரத்தொழிற்சாலை, கண்ணாடி, டயர் உற்பத்தி ஆலைகள், பேப்பர் மில், கனரக வாகனங்களுக்கு தேவையான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

இந்த நிறுவனங்கள் குறைந்த அளவு பணியாளர்களை கொண்டு பராமரிப்பு பணிகளை மிகவும் பாதுகாப்பாகவும், கவனமாகவும், சமூக இடைவெளியை கடைபிடித்து செய்ய அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசு தொழிற்சாலைகள் செயல்பட அனுமதி அளித்துள்ளதை தொடர்ந்து இன்னும் ஓரிரு நாட்களில் அந்த நிறுவனங்கள் செயல்பட தொடங்கும். அதேபோன்று, மற்ற நிறுவனங்களுக்கும் படிப்படியாக விலக்கு அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

* எண்ணெய், இரும்பு, சிமெண்ட், சர்க்கரை, பெயிண்ட், உரம், கண்ணாடி, டயர், பேப்பர் மற்றும் வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு ஆலைகளுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு.

* குறைந்த அளவு பணியாளர்களை கொண்டு, சமூக இடைவெளியுடன் பணியாற்ற வேண்டும்.

* இன்னும் ஓரிரு நாட்களில் இந்த நிறுவனங்கள் செயல்படும். மற்ற நிறுவனங்களுக்கும் படிப்படியாக விலக்கு அளிக்கப்படும்.

Related Stories: