மே மாதத்திற்கான இலவச ரேஷன் பொருட்களை பெற வீடுகளுக்கே வந்து நாளை டோக்கன் வழங்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: ரேஷன் கடைகளில் மே மாதத்திற்கான அரிசி, சர்க்கரை உள்பட அத்தியாவசிய பொருட்கள்  வழங்குவதற்காக டோக்கன் வருகிற 24 மற்றும் 25ம் தேதி வீடுகளுக்கே வந்து  வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதிசெய்திடவும், நியாய விலை கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்குவது தொடர்பாகவும் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் சண்முகம், நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் கிருஷ்ணன், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கூடுதல் தலைமை செயலாளர் தயானந்த் கட்டாரியா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மேலாண்மை இயக்குநர் சுதாதேவி, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் சஜ்ஜன் சிங் ரா.சவான் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

கொரோனா நோய் தொற்றினை தடுக்க நாட்டிலேயே முதன்முதலாக, தமிழக அரசு மாநிலம் முழுவதற்குமான முழு ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்தது. ஏழை, எளிய மக்களின் சிரமங்களை உணர்ந்து அவர்களுக்கு தகுந்த நிவாரணம் வழங்க ஊரடங்கு உத்தரவு காலம் ஆரம்பிக்கும் முன்னரே, ₹3,280 கோடி மதிப்பில் சிறப்பு நிவாரண உதவிகளை வழங்க ஆணையிட்டது. அதில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அவர்களுக்கு உரித்தான ஏப்ரல் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் விலையின்றி வழங்க உத்தரவிடப்பட்டது. இன்று வரை 1,89,01,068 குடும்பங்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, 15.4.2020 அன்று முதல் மீண்டும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதற்கு முன்பே, 13.4.2020 அன்று தமிழ்நாட்டில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும், அதாவது ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு எப்பொழுதும் வழங்கப்படும் அரிசி ஆகியவை நியாய விலை கடைகளில், விலையின்றி வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.  

நோய்த்தொற்று ஏற்படாத வண்ணம் மேற்படி அத்தியாவசிய பொருட்கள் பாதுகாப்பாக அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன், வருகிற 24 மற்றும் 25ம் தேதி ஆகிய நாட்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அவரவர் வீடுகளிலேயே டோக்கன் வழங்கப்படும். அந்த டோக்கன்களில் அத்தியவசிய பொருட்கள் வழங்கப்படும் நாள் மற்றும் நேரம்  குறிப்பிடப்பட்டிருக்கும். சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள், டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் தத்தமது நியாய விலை கடைகளுக்கு சென்று அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். இந்த நடைமுறையை பொதுமக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும். மேலும், சமூக இடைவெளியை கடைபிடித்து, தங்களுக்குரிய அத்தியாவசிய பொருட்களை விலையில்லாமல் பெற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: