நாடு முழுவதும் உள்ள பஞ்சாயத்து அமைப்புகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி நாளை உரை; முக்கிய திட்டங்களும் தொடக்கம்

டெல்லி: கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு  உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று  உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இதற்கிடையே, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், மருத்துவ வல்லுநர்கள் உள்ளிட்ட பல்வேறு  தரப்பினருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்திய வண்ணம் உள்ளார். இந்நிலையில், தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி நாடு முழுவதும் உளள  கிராம பஞ்சாயத்து அமைப்புகளுடன் பிரதமர் மோடி உரையாடுகிறார்.

கடந்த 1992-ம்ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி பஞ்சாயத்து ராஜ் சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின்படி கிராம அளவில் உள்ளாட்சி அமைப்பில்  தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், தாங்களே நிர்வாகம் செய்யும் உரிமையை பெறுகிறார்கள். மத்திய, மாநில அரசுகளின் அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை  உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுடன் பகிர்ந்துகொள்வது தான் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது.

இந்நிலையில், ஏப்ரல் 24-ம் தேதி நாளை நாடு முழுவதும் உள்ள பஞ்சாயத்து அமைப்புகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் நரேந்திர மோடி  உரையாடுகிறார். அப்போது, ஜி.பி.டி.பி. எனப்படும் கிராம பஞ்சாயத்து மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இ. பஞ்சாயத்து முறைக்கான போர்டல் மற்றும் மொபைல்  செயலி உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்களையும் துவக்கி வைக்கிறார். மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகள் குறித்து பஞ்சாயத்து அமைப்புகளுடன்  ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: