கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிந்த அரசு டாக்டர்கள், ஊழியர்கள்: மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

சென்னை: கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக அரசு டாக்டர்கள், பணியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சென்னை அமைந்தகரையை  சேர்ந்த 56 வயதான டாக்டர் ஒருவர் சிகிச்சை பலனின்றி வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில்  கடந்த 19ம் தேதி உயிரிழந்தார். இதை தொடர்ந்து டாக்டரின் உடல் டி.பி.சத்திரம் பகுதியில் உள்ள கல்லறைக்கு அடக்கம் செய்ய கொண்டு செல்லப்பட்டது. ஆனால், அவரது உடலை அடக்கம் செய்ய விடாமல் எதிர்ப்பு தெரிவித்து சிலர் போராட்டம் நடத்தினார்கள். மேலும், ஆம்புலன்ஸ் கண்ணாடியை அடித்து நொறுக்கினர். இதில், மாநகராட்சி ஊழியர் ஒருவர் படுகாயமடைந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இதற்கு திமுக, காங்கிரஸ், பாமக உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில், கொரோனா தொற்றால் உயிரிழக்கும் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களின் உடலை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும், உயிரிழந்த டாக்டருக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக நேற்று காலை அனைத்து அரசு மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக, சென்னையில் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர். கொரோனா வார்டுகளில் பணியில் இருந்த ஊழியர்களும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

இதை தொடர்ந்து நேற்று இரவு 9 மணியளவில் கொரோனா தொற்றால் உயிர் நீத்த டாக்டர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள்  மற்றும் அரசு ஊழியர்கள் தங்களுடைய குடும்பங்களுடன் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள்.இதுகுறித்து அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் டாக்டர் ராமலிங்கம் கூறுகையில், ‘‘தமிழகத்தில் சமீபத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள், தனியார் மருத்துவர்களுடைய இறுதி சடங்கு அரசு மரியாதையுடன் நடத்த வேண்டும். மருத்துவர்களுக்கும், மருத்துவ பணியாளர்கள்  குடும்பத்திற்கும் இழப்பீடாக ஒரு கோடியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியும் வழங்க வேண்டும்’ என்றார்.இந்நிலையில் கொரோனா பணியில் உள்ளவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து அரசு அலுவலர்கள் இன்று  கருப்பு சட்டை அணிந்து பணிக்கு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: