கொரோனா சிகிச்சையில் இருந்த தனியார் நிறுவன அதிகாரி பலி

சென்னை: கொரோனோவுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தனியார் நிறுவன அதிகாரி பலியானார். சென்னை அருகே ஓஎம்ஆர் சாலை நாவலூர் அடுத்த கழிப்பட்டூரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் விசாகன் (56). அரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் துணைப் பொது மேலாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த மார்ச் 24ம் தேதி விசாகன், டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். அவருக்கு, சளி, இருமலுடன் காய்ச்சல் ஏற்பட்டது.  இதையடுத்து கடந்த 31ம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு அவரை பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

அவரது மனைவி, மகளுக்கு  நடந்த பரிசோதனையில்   அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என தெரிந்தது. கடந்த 20 நாட்களாக சிகிச்சையில் இருந்த விசாகன், நேற்று மதியம் 12.30 மணியளவில் இறந்தார். கொரோனாவில் மரணம் அடைந்த விசாகன் கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்தவர். அவரது உடல் சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்படாமல் வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் ரகசியமாக எரியூட்டப்பட்டது. கொரோனா பாதிப்புக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல் பலி ஏற்பட்டுள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Related Stories: