தியேட்டர் மூடல், பட ரிலீஸ் ஒத்திவைப்பு, ஷூட்டிங் நிறுத்தம் தமிழ் திரையுலகில் ரூ.600 கோடி இழப்பு

சென்னை: கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதற்கு முன், கடந்த மார்ச் மாதம் 19ம் தேதியில் இருந்தே சினிமாவின் அத்தனை பணிகளும் நிறுத்தப்பட்டது. தியேட்டர்கள் மூடப்பட்டது. பலநூறு பேர் பணியாற்றும் படப்பிடிப்புகள் முதல், ஒரு அறைக்குள் பணியாற்றும் எடிட்டிங் பணிகள் வரை அத்தனையும் நிறுத்தப்பட்டது. ஊரடங்கு காலத்திலும், பிறகு வரும் காலத்திலும் மிகப் பெரிய  நஷ்டத்தை சந்திக்க இருப்பவர்கள் தயாரிப்பாளர்கள்தான். இதுகுறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க முன்னாள் செயலாளர் பைவ் ஸ்டார் எஸ்.கதிரேசன் கூறியதாவது:கோடை விடுமுறையில் எப்போதுமே 25 சதவீத வசூல் கூடுதலாக இருக்கும். அதை நம்பி பல சிறுபட்ஜெட் படங்கள் வெளியாகும். இப்போது அதற்கும் வழியில்லை. மாதம் ஒரு பெரிய படம் வெளியாகிறது. அதன் வசூலையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், மாதம் ஒன்றுக்கு சுமார் 150 கோடி ரூபாய் இழப்பை தயாரிப்பாளர்கள் சந்திக்கின்றனர். இந்த நிலமை சீராக 2 மாதங்களாகும் என்கின்றனர். ஒரு மாதத்தில் மட்டும் தயாரிப்பாளர்கள் தரப்பு 500 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது என்றார்.

விநியோகஸ்தர்கள் சங்க முன்னாள் தலைவர் கலைப்புலி ஜி.சேகரன் கூறும்போது, ‘விநியோகத்துறையில் சுமார் 200 கோடி ரூபாய்க்கு மேல் முடங்கி கிடக்கிறது. 100 கோடி ரூபாய் வரை நஷ்டத்தை சந்தித்துள்ளனர்’’ என்றார், .தியேட்டர்களின் நிலை குறித்து தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சம்மேளனத்தின் புரவலர் அபிராமி ராமநாதன் கூறுகையில், ‘ஒரு தியேட்டர் இயங்கினாலும், இயங்காவிட்டாலும் பணியாளர்கள் சம்பளம், பராமரிப்பு செலவு என்று மாதம் 5 லட்சம் ரூபாய் வரை செலவாகும். மே 3ம் தேதிக்கு பிறகு தியேட்டர் திறக்கப்படுவதற்கு உத்தரவாதம் இல்லை. காரணம், தியேட்டர் என்பது பொதுமக்கள் ஏராளமாக கூடும் இடம். 50 சதவீத ஆக்குபேஷன் சிஸ்டம் பற்றி யோசிக்கலாம். ஆனால், இது பெரிய பட்ஜெட் படங்களை பாதிக்கும். எப்படி இருந்தாலும், தியேட்டர்கள் குறித்த வழிகாட்டுதலை அரசுதான் செய்யும்’’ என்றார்.

Related Stories: