வடமாநிலங்களில் இருந்து திரும்பியவர்கள் திண்டாட்டம்: அரிசியும் இல்லை... அரசு உதவியும் இல்லை

* வீடு, வீடாகச் சென்று உதவி கேட்கும் அவலம்

* பட்டிவீரன்பட்டி பகுதியில் பரிதாபம்

பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி அருகே ஊரடங்கு உத்தரவு நேரத்தில்  தமிழக அரசின் எந்த உதவியும் கிடைக்காமல், வடமாநில்களில் இருந்து திரும்பியவர்களின் குடும்பங்கள் திண்டாடுகின்றன. இந்தக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் வீடு, வீடாகச் சென்று அரிசி  கேட்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே சேவுகம்பட்டி பேரூராட்சியில் நாகலாபுரம் கிராமம் உள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட  ஏழை, எளிய குடும்பங்கள் வசித்து வருகின்றன. பெரும்பாலும் வியாபாரத்திற்காக குடும்பத்துடன் மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு செல்லும்  இப்பகுதி மக்கள், வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ ஊர் திரும்புவது வழக்கம்.

கொரோனாவால் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு காரணமாக, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்குச் வேலைக்காக சென்றவர்கள் சென்ற மாதம் சேவுகம்பட்டிக்கு திரும்பினர். வெளிமாநிலங்களில்  இருந்து இவர்கள் வந்ததால் சுகாதாரத்துறையினரின் மேற்பார்வையில் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியை சேர்ந்த 50 குடும்பங்களுக்கு ரேஷன் அட்டை இல்லை.  இதனால் தமிழக அரசு கொடுத்த ரூபாய் ஆயிரம்  மற்றும் அரிசி உள்ளிட்ட எந்த பொருட்களும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. பலமுறை வருவாய்த்துறை அதிகாரிகளிடம்  கேட்டும் அவர்களுக்கு எந்த  நிவாரணமும் வழங்கப்படவில்லை. இதனால் நாள்தோறும் பசி, பட்டினியுடன் குழந்தைகளை வைத்துக்கொண்டு குடும்பத்தினர் அவதிப்பட்டு வந்தனர்.

பசிக்கொடுமை தாங்காமல் அருகே  இருக்கும் திருநகர், எழில்நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு 30க்கும் மேற்பட்ட பெண்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று தங்களுக்கு அரிசி அல்லது உதவி செய்யுமாறு கேட்டனர். அப்பகுதியை சேர்ந்த பலரும் அரிசி மற்றும் உதவிகளை செய்து வருகின்றனர். இப்பகுதியில் பெண்கள் கூட்டம், கூட்டமாக அரிசி கேட்டு சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. அரிசி கேட்டு வந்த பெண் கூறுகையில், ``வீட்டிலேயே அடைந்து கிடக்கும் எங்களிடம் சமையல் பொருட்கள் வாங்க போதுமான பணம் இல்லை. ரேஷன் அட்டை இல்லாததால் அரசின் உதவி கிடைக்காமல் அவதிப்படுகிறோம்.  குழந்தைகளின் பசியைப் போக்க வேறு வழி இல்லாமல் வீடு வீடாகச் சென்று அரிசி கேட்கிறோம். துப்புரவு வேலை கொடுத்தாலும் அதையாவது செய்து எங்கள் பிள்ளைகளுக்கு ஒரு வேளை கஞ்சி கொடுப்பதற்கு வழி கிடைக்கும். அரசு எங்கள் நிலைமையை கருத்தில் கொண்டு  எங்களின் பசியைப் போக்க முன்வர வேண்டும்’’ என்றனர்.

Related Stories: