அருணாச்சல பிரதேசத்தை தொடர்ந்து பட்டியலில் 2-வதாக சேர்ந்தது மணிப்பூர்; கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலமாக அறிவித்தார் முதல்வர் பிரேன் சிங்

இம்பால்: இந்தியாவில் அருணாச்சல பிரதேசத்தை தொடர்ந்து கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலமாக மணிப்பூர் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 210க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தனது கோர முகத்தைக் காட்டி வருகிறது. இதுவரை மகாராஷ்ராவில் பாதிப்பு 3600-ஐ தாண்டிய நிலையில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,265 ஆகவும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 543 ஆகவும் உயர்ந்துள்ளது.கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் டெல்லி, மத்திய பிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா ஆட்டிப்படைத்து வருகிறது.

இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 2 பேரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று உறுதியாகவில்லை என்று முதல்வர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார். மருத்துவர்கள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பால் தான் இது சாத்தியமானது என்றும் முதல்வர் பிரேன் சிங் தகவல் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலங்களின் பட்டியலில் அருணாச்சல பிரதேசத்தை தொடர்ந்து 2-வது மாநிலமாக மணிப்பூர் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: