ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இதயநோயாளிக்கு சிகிச்சை அளித்த டாக்டர், 5 நர்சுகளுக்கும் கொரோனா: மருத்துவப்பிரிவு உடனடியாக மூடல்

சென்னை: ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இதயநோயாளிக்கு சிகிச்சை அளித்த டாக்டர் மற்றும் அவருடன் பணியாற்றிய 5 நர்சுகளுக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் பணிபுரிந்த கட்டிடம் மூடப்பட்டு 30க்கும் மேற்பட்ட நோயாளிகள் மற்றும் உடன் பணிபுரிந்தவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ராஜிவ்காந்தி அரசு தலைமை மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் பன்நோக்கு மருத்துவமனை ஆகிய இடங்களில் கொரோனாவுக்கென சிறப்பு வார்டுகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. கொரோனா நோயாளிகளைக் கையாளுவதில் மருத்துவர்கள் என்ன செய்ய வேண்டும், செவிலியர்கள் என்ன செய்ய வேண்டும், லேப் டெக்னீஷியன்கள் என்ன செய்ய வேண்டும், ஒரு நோயாளி வந்தால் எப்படி கையாள வேண்டும் என்பது குறித்தெல்லாம் புரோட்டோகால் உருவாக்கப்பட்டது.

கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்க முதல் தளத்தில் 6 படுக்கைகளைக் கொண்ட ஒரு வார்டும் மூன்றாவது தளத்தில் 36 படுக்கைகளைக் கொண்ட ஒரு வார்டும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அறைகளில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு பணியாளர் ஆகியோர் மட்டும்தான் உள்ளே செல்ல முடியும். இதற்கு மூன்று கட்டங்களாக பாதுகாப்பு உள்ளது. வேறு யாரும் இவற்றை தாண்டி உள்ளே செல்ல முடியாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொரோனா பரவலுக்குப் பிறகு, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் காய்ச்சல் நோயாளிகளுக்காக மட்டுமே செயல்படும் சிறப்பு வெளிநோயாளிகள் பிரிவு உருவாக்கப்பட்டிருக்கிறது. காய்ச்சலுடன் வந்தவர்களுக்கு வெளிநாட்டுப் பயண பின்புலமோ, போய்வந்தவர்களுடன் பழகும் வாய்ப்போ இருந்தால், உடனடியாக கொரோனா சோதனை செய்யப்படுகிறது.

கொரோனா சிகிச்சை பெறும் நோயாளிகள் உள்ள வார்டுக்கு செல்பவர்கள் அனைவருக்குமே விண்வெளி வீரர்கள் அணிவது போன்ற உடை வழங்கப்படுகிறது. இந்த உடை தேவையான தருணத்தில் சரியாகப் பயன்படுத்தப்படுகிறது. இவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து பயிற்சியும் அளிக்கப்பட்டிருக்கிறது. எப்படி அணிவது, எப்படி கழற்றுவது, எப்படி அகற்றுவது என விரிவான பயிற்சிகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. மேலும், இங்கு தங்கியிருக்கும் நோயாளிகளுக்கு இங்குள்ள சமையலறையிலேயே சமைக்கப்பட்ட மிகச் சிறப்பான உணவு அளிக்கப்படுகிறது.  இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட காஞ்சிபுரத்தை 45 வயதுடைய நபருக்கு சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தனிமைப் படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்றால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 15ம் தேதி சென்னை அரசு மருத்துவ கல்லூரியில் பயின்ற 34 வயது மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவன் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு நோய் தொற்று ஏற்பட்டதற்கான காரணம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அவர், ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் இதயநோய் பிரிவில் பணியில் இருந்தது தெரியவந்தது. அவர் குறித்து விசாரித்தபோது, சில நாட்களுக்கு முன்னர் இதய நோய் பிரச்னையில் அவசர சிகிச்சை பிரிவுக்கு ஒருவரை அழைத்து வந்துள்ளனர். அவரை இந்த பயிற்சி டாக்டர் பரிசோதனை செய்துள்ளார். ஆனால் அந்த நோயாளி உயிரிழந்து விட்டார். இதய நோய்க்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டதாக கருதி, உடலை டாக்டர்கள் அனுப்பி விட்டனர்.

அந்த நோயாளியை தவிர அவர் வேறு யாருக்கும் சிகிச்சை அளிக்கவில்லை. இதனால் இதய நோயாளிக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு, அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, உயிரிழந்திருக்கலாம். அவருக்கு சிகிச்ைச அளித்த டாக்டருக்கு தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் அவருடன் பணியாற்றிய நர்சுகள் 5 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை உடனடியாக வெளியிட நிர்வாகம் தயக்கம் காட்டுகிறது. அதேநேரத்தில், அவர் பணிபுரிந்த இடங்களில் உள்ள நோயாளிகளை வேறு தனிமைப்படுத்தப்பட்ட அறைக்கு மாற்றினர். அவர் பணிபுரிந்த இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் சுகாதாரத்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர். மேலும் அவரிடம் சிகிச்சை பெற்ற நோயாளிகள், செவிலியர்கள் மற்றும் இதய நோய் பிரிவில் பணிபுரிந்தவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் டாக்டர் ஜெயந்தி கூறியதாவது: ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பணி செய்த 34 வயது பட்டமேற்படிப்பு மாணவனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் பணியில் இருந்த இதய நோய் பிரிவு கட்டிடத்துக்கு கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. இதய நோய் பிரிவு கட்டிடத்தில் இருந்த 30க்கும் மேற்பட்ட நோயாளிகள் அனைவரும் வேறு வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும் அவர்களையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி இருந்தால் அவர்களுக்கும் சிகிச்சை அளிக்க தயாராக உள்ளோம்.

மேலும், மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளோம். மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர்கள் யாருக்கும் காய்ச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்டவைகள் ஏற்பட்டால் உடனே தெரிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளோம். ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் உள்ள அனைத்து கட்டிடத்திலும் தொடர்ந்து கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: