கொரோனா சிறப்பு வார்டுகள் அமைக்க தமிழகம் முழுவதும் 841 அரசு கட்டிடங்கள் தேர்வு: தேவையான வசதிகள் ஏற்படுத்தும் பணி தீவிரம்

சென்னை: அரசு கட்டிடங்களில் கொரோனா வார்டுகள் அமைப்பதற்காக தமிழகம் முழுவதும் உள்ள 841 அரசு கட்டிடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதில் படுக்கை வசதி உள்ளிட்ட தேவையான வசதிகளை ஏற்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.     பல்வேறு அரசு கட்டிடங்களை கொரோனா சிறப்பு வார்டாக உருவாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பொதுப்பணித்துறை, வருமானவரித்துறை, பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை என அனைத்து துறைகளிலும் தற்போது கட்டப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ள கட்டிடங்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.  சுகாதாரத்துறையினரின் ஆலோசனையுடன் எந்தெந்த கட்டிடங்கள் இதுபோன்ற சிறப்பு வார்டுகளாக மாற்றும் வகையில் உள்ளது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழகம் முழுவதும் 841 அரசு கட்டிடங்கள் கொரோனா சிறப்பு வார்டுகளாக மாற்றுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.  வார்டுகளாக மாற்றும் பணிகள் பொதுப்பணித்துறையின் கட்டுமான பிரிவு முதன்மை தலைமை பொறியயாளர் ராஜா மோகன் உத்தரவின் பேரில் அனைத்து மாவட்டங்களிலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பணிகள் முடியும்போது 841 அரசு கட்டிடங்களில் 51,472 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டிருக்கும். இதில் அனைத்து மருத்துவ உபகரணங்கள் நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் இடம் பெறும்.   இதுதவிர தனியார் பலர் கொரோனா வார்டு அமைக்க தங்கள் கட்டிடங்களை தர முன்வந்துள்ளனர். அந்த கட்டிடங்களையும் கொரோனா வார்டு அமைப்பதற்கான ஆய்வுகளையும் தமிழக அரசு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: