தொடர் ஏமாற்றத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்; ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக ஐபிஎல் போட்டி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு...பிசிசிஐ அறிவிப்பு

மும்பை: இந்தியா உள்ளிட்ட 205 நாடுகளும் மேலாக கொரோனா வைரஸ் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 60 -வது இடத்தில் இருந்த இந்தியா 19-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,487 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 393 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கபட்ட மாநிலத்தில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் 1204 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில்  81 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதற்கிடையே, இந்தியன் பிரிமீயர் லீக்(ஐபிஎல்) டி20 கிரிக்கெட் போட்டித் தொடர் இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் பிரபலமான உள்ளூர் போட்டி. இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐசிஎல்) டி20 போட்டியின் வணிகரீதியான அங்கீகாரம் பெற்ற  வடிவம்தான் ஐபிஎல். எனினும் தடையில்லாமல் நடந்துவந்த ஐபிஎல் போட்டியின் 13வது தொடரை திட்டமிட்டபடி இந்த ஆண்டு தொடங்க முடியவில்லை. கொரோனா பீதி காரணமாக மார்ச் 29ம் தேதி தொடங்குவதற்காக இருந்த ஐபிஎல்  போட்டி ஏப்.15ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது.

இந்த பிரச்னை எல்லாம் ஏப்.15ம் தேதிக்குள் முடிவுக்கு வரும் என்று பிசிசிஐ எதிர்பார்த்தது. இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாகி கொண்டுதான் உள்ளது. எனவே ஐபிஎல் போட்டி மீண்டும் தள்ளி  வைக்கப்படும் நிலையே தொடர்ந்தது. இந்நிலையில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. எத்தனை நாட்கள் ஊரடங்கு நீட்டித்தாலும் ஐபிஎல் ரத்து செய்யப்பட வாய்ப்பில்லை. காரணம் அது பல்லாயிரம் கோடி வணிகம். எனவே மீண்டும் போட்டி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: