ஆளும் கட்சியினர் தலையீட்டால் ரேஷன் கடைகளில் நிவாரணம் வாங்குவதில் சிக்கல்: பொதுமக்கள் அதிருப்தி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் ஆளும் கட்சியினரின் தலையீட்டால், ரேஷன் கடைகளில் நிவாரண பொருட்களை கிராம மக்கள் முறையாக பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், வேலைக்கு போகாமல் வருவாய் இன்றி வீடுகளில் முடங்கியுள்ள மக்களின் நலனுக்காக, அரசு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன்படி குடும்பத்துக்கு, ₹1000 நிவாரண உதவி, சமையலுக்கு தேவையான மளிகை பொருட்கள், ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படுகிறது. ஒரு நாளைக்கு, 100 ரேஷன் கார்டுகளுக்கு மட்டும் நிவாரண பொருட்கள் வழங்கும் நடைமுறை செயல்படுத்தப்படுகிறது. இதனால், அனைத்து நாட்களும் ரேஷன் கடைகள் பிசியாக இயங்குகின்றன.  இந்நிலையில், அரசு வழங்கும் உதவிகளை, உள்ளூர் ஆளும் கட்சி பிரமுகர்கள் வழங்குவது போன்று, மக்களை இழுத்தடிக்கின்றனர்.

மேலும், ஆளும் கட்சி பிரமுகர்கள் நாள் முழுக்க ரேஷன் கடைகளில் அமர்ந்துகொண்டு  பொதுமக்கள் பொருட்கள் வாங்க வரும்போது, தங்கள் ஆதரவாளர்களுக்கு முன்னுரிமை வழங்க, ஊழியர்களை வற்புறுத்துகின்றனர். இதனால் ரேஷன் கடைகளில் அதிமுகவினர் தலையீடால், தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்க முடியாத சூழல் ஏற்படுகிறது என பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கின்றனர். எனவே குடிமைப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள், ரேஷன் கடைகளில் ஊழியர்களை தவிர வேறு யாரும் அமரவும், பொருட்கள் வழங்கும் நடவடிக்கையில் தலையிடவும் தடை விதிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: