விஸ்வரூபம் எடுத்த கொரோனா விவகாரம்; WHO-க்கு வழங்கி வந்த ரூ.3,000 கோடி நிதியை நிறுத்தியது அமெரிக்கா...அதிபர் டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரசின் மையப்புள்ளியாக அமெரிக்கா மாறியிருக்கிறது. இங்கு நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அபரிமிதமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உலகில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு  கடந்த 24 மணி நேரத்தில் 2,407 பேர் பலியாகி இருப்பது அமெரிக்க மக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது. அதே போல.வேறெந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டி உள்ளது. அமெரிக்காவில்  இதுவரை கொரோனாவால் 26,047 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,13,886 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வரும் நிலையில், அதை கட்டுப்படுத்த முடியாத அதிபர் டிரம்ப், உலக சுகாதார அமைப்பின் மீது பழி சுமத்தி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள்  சந்திப்பின் போது பேசிய அவர், ‘‘உலக சுகாதார அமைப்புக்கு அதிகப்படியான நிதியை அமெரிக்கா அளித்து வருகிறது.

ஆனால், பயணக் கட்டுப்பாடு விதித்த நேரத்தில், எனது முடிவை அந்த அமைப்பு விமர்சனம் செய்து ஏற்றுக் கொள்ள மறுத்தது. இதுபோல், அவர்கள் பல விஷயங்களில் தவறு செய்துள்ளனர். கொரோனா குறித்து ஒரு மாதத்திற்கு முன்கூட்டியே  அவர்கள் எச்சரித்திருக்க வேண்டும். ஆனால் அதை செய்யத் தவறி விட்டது. பல நேரத்தில் அந்த அமைப்பு தவறான முடிவுகளையே எடுக்கிறது. மேலும், சீனாவுக்கு ஆதரவாக செயல்படுகிறது. இது நல்லதற்கில்லை. நாங்கள் இனி மிகுந்த  விழிப்புடன் செயல்படுவோம். உலக சுகாதார அமைப்பிற்கு செலவிடும் நிதியை நிறுத்தவும் தயங்க மாட்டோம்,’’ என்றார்.

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பிற்கு வழங்கி வந்த ரூ.3,000 கோடி நிதியை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. மேலும், கொரோனா வைரஸ் பரவலை தவறாக நிர்வகித்த WHO-இன் பங்கை மதிப்பிடுவதற்கு ஒரு ஆய்வு நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அதிபர் டிரம்பின் இந்த முடிவு உலக சுகாதார அமைப்பிற்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: