சென்னையில் உள்ள கல்லூரி விடுதிகளில் 20,000 படுக்கையுடன் தனிமைப்படுத்துதல் மையம்: தயார் நிலையில் 6,000 படுக்கைகள்

சென்னை, : சென்னையில் உள்ள கல்லூரி விடுதிகளில் 20 ஆயிரம் படுக்கைகளுடன் தனிமைப்படுத்துதல் மையம் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதில் தற்போது 6 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்தால் அவர்களை தனிமைப்படுத்துவதற்கு ஏதுவாக நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் 500 படுக்கை கொண்ட தனிமைப்படுத்துதல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று சென்னையில் உள்ள கல்லூரி விடுதிகளில் 20 ஆயிரம் படுக்கைகள் கொண்ட தனிமைப்படுத்துதல் மையங்களை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது : சென்னை நந்தம்பாக்கத்தில் 550 படுக்கை வசதிகளுடன் கூடிய தனிமைப்படுத்துதல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ஐஐடியில் 500 படுக்கைகள், அண்ணா பல்கலைக்கழகம் 750 உள்ளிட்ட தற்போது 6000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. இதை தவிர்த்து சென்னையில் உள்ள கல்லூரி விடுதிகள் அனைத்திலும் 20 ஆயிரம் படுக்கைகளுடன் கூடிய தனிமைப்படுத்துதல் மையம் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இந்த பணிகள் விரைவில் நிறைவடையும் என்றனர்.

சென்னை வர்த்தக மையத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் 500 படுக்கை வசதி கொண்ட கொரோனா சிறப்பு வார்டு களை மாநகராட்சி ஆணையர் நேற்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 80 பகுதிகள் சீல் வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. இந்த பகுதிகளில் தினசரி 5 முறை கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. அனைத்து மண்டலங்களிலும் வீடு வீடாக சென்று மாநகராட்சி ஊழியர்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, சாதாரண காய்ச்சல், இருமல் உள்ளவர்களை பரிசோதனைக்கு பின் வீட்டிற்கு அனுப்பாமல் இங்கு தனிமைப்படுத்தப்படுவார்கள்.

கொரோனா தொற்று உள்ள பகுதிகளில் ஏப்ரல் 30ம் தேதிக்குள் 40 ஆயிரம் பேரிடம் இருந்து ரத்த மாதிரிகள் எடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள 35 பரிசோதனை மையங்களில் நேற்று வரை 600 மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நோயின் தாக்கம் குறித்து அறிந்து சிகிச்சையை துரிதப்படுத்த முடியும். வரும் காலங்களில் கூடுதல் இடம் தேவைப்பட்டால் அண்ணா அறிவாலயம், ராகவேந்திரா திருமண மண்டபம் போன்ற தனியார் இடங்கள் சிறப்பு வார்டாக பயன்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: