வங்கிகளில் சமூக இடைவெளி கடைபிடிக்காத பொதுமக்கள்: கொரோனா பரவும் அபாயம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மணவாள நகர் பகுதியில் உள்ள வங்கிகளுக்கு வரும் பொதுமக்கள் சமூக இடைவெளி கடைபிடிக்காததால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது. ஊரடங்கு உத்தரவால் அனைத்து தேசிய வங்கிகளும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டும் திறந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், திருவள்ளூர் நகரில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மூவரின் வீட்டருகே உள்ள வங்கியில் சமூக இடைவெளியின்றி தினசரி ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். இதேபோல் மணவாள நகரில் உள்ள பல வங்கிகளில் பொதுமக்கள் சமூக இடைவௌி கடைபிடிக்காமல் குவிகின்றனர். இதனால் அவர்களுக்கு கொரோனா தொற்று வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அனைத்து வங்கிகளிலும் சமூக இடைவெளி கடைபிடிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருத்தணி : திருத்தணி மா.பொ.சி சாலையில் உள்ள பல்வேறு வங்கிகளில் ஏராளமானோர் நேற்று குவிந்திருந்தனர். ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வங்கிகளுக்கு வந்ததால் திருத்தணி போலீசார், நகராட்சி நிர்வாகத்தினர் மற்றும் வருவாய் துறையினர் இணைந்து பொதுமக்கள் ஒவ்வொரு வங்கியின் நுழைவாயிலில் சமூக இடைவெளியை கடைபிடித்து தங்களுக்கு தேவையான பலன்களை பெற்றுச் செல்ல அறிவுறுத்தினர். பின்னர் பொதுமக்கள் கடும் வெயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பணம் எடுத்து சென்றனர்.

Related Stories: