ஜாலியன்வாலாபாக் படுகொலை; தியாகிகளின் துணிச்சல் நாட்டு மக்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும்...பிரதமர் மோடி டுவிட்

டெல்லி: 1919-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி (இன்றை நாள்) குருகோவிந்த் சிங் கால்ஸா (சீக்கிய அறப்படை) இயக்கத்துக்கு அடிக்கல் நாட்டிய நிகழ்வு, அம்ரித்சரில் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. அம்ரித்சர் நகரில் ஜாலியன்வாலா பாக் திடலில்  ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனப் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர். இத்திடல் நாற்புறமும் உயர்ந்த மதில்களால் சூழப்பட்டிருந்தது. உள்ளே செல்ல ஒரே ஒரு குறுகிய வழியே உண்டு. இந்நிலையில் இராணுவ ஜெனரல் ரெஜினால்ட்  டையர் என்பவன் 100 வெள்ளையின படையினரையும், 50 இந்திய சிப்பாய்களையும் அழைத்து வந்து எந்த எச்சரிக்கையும் தராமல் கூட்டத்தை நோக்கிச் சுடுமாறு உத்தரவிட்டான்.

திறந்திருந்த ஒரேயொரு வாயிலை நோக்கி மக்கள் முண்டியடித்து ஓடினர். சுவர்களின் மீது ஏறிக் குதித்தனர். வேறு சிலர் சூட்டிலிருந்து தப்பிக்க திடலின் நடுவிலிருந்த கிணற்றில் வீழ்ந்தனர். இவ்வாறு கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்தவர்களின்  எண்ணிக்கை 120 ஆகும். அதிகாரபூர்வமாக மொத்தம் 379 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். ஆனால், தனியார்களின் தகவல்களின் அடிப்படையில் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் வரையில் கொல்லப்பட்டதாகத்  தெரிவிக்கப்படுகிறது. இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த படுகொலை நாடு முழுவதும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்த இந்நாளில், பிரதமர் நரேந்திர மோடி நினைவு கூர்ந்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளிட்ட டுவிட்டர் பதிவில், ஜாலியன்வாலாபாக்கில் கொல்லப்பட்ட தியாகிகளை இந்நாளில் தலை வணங்குகிறேன். அவர்களது துணிச்சல் நாட்டு மக்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும். அவர்களின் தைரியத்தையும் தியாகத்தையும் நாம் ஒருபோதும் மறக்க மாட்டோம். அவர்களின் வீரம் அடுத்த ஆண்டுகளில் இந்தியர்களை ஊக்குவிக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories: