அண்ணா மேம்பாலம் அருகே பாமாயில் ஏற்றிவந்த லாரி நடுரோட்டில் கவிழ்ந்தது

* பொதுமக்கள் குடங்களில் பிடித்து சென்றனர்

* போலீசார் அடித்து விரட்டியதால் பரபரப்பு

சென்னை: சென்னை துறைமுகத்தில் இருந்து 12 ஆயிரம் லிட்டர் பாமாயில் ஏற்றி கொண்டு மேடவாக்கம் நோக்கி டேங்கர் லாரி ஒன்று வேகமாக நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. லாரியை முருகன் என்பவர் ஓட்டினார். லாரி அண்ணா மேம்பாலத்தின் மீது ஏறி இறங்கும் போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடியதால், டேங்கரில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக, லாரி மேம்பாலத்தின் இறக்கத்தில் நடுரோட்டில் கவிழுந்து விபத்துக்குள்ளனது. இதில் டிரைவர் முருகன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்தில் லாரியில் இருந்த பாமாயில் சாலையில் ஆறாக ஓடியது. இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் வீட்டில் வைத்திருந்த காலி குடங்கள், கேன்களில் சுத்திகரிக்கப்படாத பாமாயிலை பிடித்து கொண்டு சென்றனர். விபத்து குறித்து தகவல் அறிந்த பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்கள் விரட்டினர்.

மேலும், விபத்தால் தீவிபத்து ஏதேனும் ஏற்படும் என்பதால் திருவல்லிக்கேணி, தேனாம்பேட்டை, எழும்பூர் பகுதியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீர் பீச்சி அடித்தனர். பிறகு கிரேன் உதவியுடன் சாலையில் கவிழுந்த லாரியை போலீசார் மீட்டனர். இதில் காயமடைந்த லாரி டிரைவரை போலீசார் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் சம்பவம் குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அண்ணாசாலையில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: